சினிமா

போலீசை மிதிக்கும் காட்சி - மோகன் லாலின் லூசிபர் படத்திற்கு எதிர்ப்பு

Published On 2019-04-04 04:40 GMT   |   Update On 2019-04-04 04:40 GMT
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி இருக்கும் லூசிபர் படத்தில் மோகன் லால் போலீஸை மிதிக்கும் காட்சிக்கு கேரள போலீஸார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #Lucifer #MohanLal
மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் மலையாள படம் லூசிபர். இந்த படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கியிருக்கிறார். லூசிபர் கேரளாவில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பல தியேட்டர்களில் திரையிட்டுள்ளனர். படத்தில் மோகன்லால் சண்டைக் காட்சிகளில் அதிரடிகாட்டி இருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

ஒரு காட்சியில், மோகன்லால் செருப்பு அணிந்த காலுடன் போலீஸ் அதிகாரியின் மார்பில் மிதிப்பது போன்ற காட்சி படத்தில் உள்ளது. இதை சுவரொட்டிகளாக அச்சிட்டும் கேரளாவில் ஒட்டி உள்ளனர். இதனை கேரள போலீஸ் சங்கம் கண்டித்து முதல்-மந்திரியிடம் புகார் அளித்துள்ளது. 



புகார் மனுவில், “மக்கள் மத்தியில் போலீசார் மீது அவப்பெயரை ஏற்படுத்துவது போல் இந்த காட்சி உள்ளது. முன்பு குற்றவாளிகளே போலீஸ் மீது கைவைக்க பயந்தனர். தற்போது பொதுமக்கள்கூட போலீசை தாக்க அஞ்சாத நிலை உள்ளது. இந்த மாதிரி படங்கள் இளைஞர்கள் மனதை கெடுத்து போலீசை தாக்க தூண்டிவிடுகின்றன. புகையிலை, மது அருந்துவது தவறு என்று படத்தில் வாசகம் இருப்பதுபோல், போலீசாரை தாக்குவது தவறு என்ற வாசகமும் இடம்பெற வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

போலீசாரின் இந்த புகாரை பலரும் சமூக வலைத்தளத்தில் கேலி செய்து வருகிறார்கள். பொதுமக்கள் படத்தை படமாக மட்டுமே பார்க்கின்றனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். #Lucifer #MohanLal #Prithviraj #ManjuWarrier

Tags:    

Similar News