சினிமா

நன்மைக்கு சமமான தீமை உண்டு என்பதே கீ - ஜீவா

Published On 2019-03-27 09:33 GMT   |   Update On 2019-03-27 09:33 GMT
காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள கீ விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், எந்த அளவுக்கு நன்மை உண்டோ அந்த அளவுக்கு தீமை உண்டு என்பதே கீ என்பதன் பொருள் என்று ஜீவா கூறினார். #KEE
ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்ஜே.பாலாஜி நடிப்பில் கீ படம் வரும் 12-ந் தேதி வெளியாக இருக்கிறது. காலீஸ் இயக்கிய இந்த படத்தை செராபின் ராயப்பன் தயாரித்துள்ளார். இந்த பட வெளியீட்டை முன்னிட்டு நடிகர் ஜீவா அளித்த பேட்டி:

பெயரை பார்த்தால் ஆங்கில படம் போல் தெரிகிறதே?

கீ என்பது தமிழ் வார்த்தை தான். தொல்காப்பியத்தில் கீ என்பதற்கு எந்த அளவுக்கு நன்மை உண்டோ அந்த அளவுக்கு தீமை உண்டு என்று அர்த்தம் சொல்லப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் பற்றிய கதை. தகவல் தொழில்நுட்பம் நமக்கு பல நன்மைகள் கொடுத்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளையும் விளக்கும் படமாக இருக்கும். இன்று ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. செல்போன் பயன்படுத்தும் அனைவருக்குமான படம் இது. எனக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியும், அனைகா ஒரு முக்கிய வேடத்திலும் நடித்து இருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி எனக்கு நண்பராக வருகிறார்.

கல்லூரி மாணவர் வேடமா?

எனக்கும் ஆச்சர்யமாக தான் இருந்தது. ஆனால் நன்றாக வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை கல்லூரி மாணவராக நடிப்பது எளிதாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. பள்ளி மாணவர்களுக்கு அவ்வளவு வி‌ஷயங்கள் தெரிகிறது. எனவே இனி கல்லூரி மாணவராக நடிப்பது சிரமம். இந்த படத்தில் ஜாலியான ஹேக்கராக வருகிறேன். கல்லூரி மாணவருக்கே உரிய அனைத்து வி‌ஷயங்களும் என் கதாபாத்திரத்தில் இருக்கும்.



உங்கள் சமூகவலைதள கணக்குகள் ஹேக் ஆகி இருக்கிறதா?

நிறைய முறை ஆகி இருக்கிறது. எந்த பாஸ்வேர்டு வைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள். இன்று இணைய திருடர்கள் அதிகரித்து விட்டார்கள். இனி இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.

இரும்புத்திரை படமும் இதே போன்றது தானே?

இல்லை. நாங்கள் படப்பிடிப்பையே முடித்த பின்னர்தான் அவர்கள் பூஜை போட்டார்கள். அந்த கதை முழுக்க பணம், வங்கி, ஏடிஎம் கார்டு பற்றியது. ஆனால் இது முழுக்க சமூகவலை தளங்களில் நீங்கள் இடும் லைக்குகள், கமெண்டுகள் பற்றியது.

ரிலீஸ் நேரத்தில் சிக்கல், பட வெளியீடு தாமதம் என்று ஹீரோக்களுக்கு நிறைய பிரச்சினைகள் வருகிறதே?

ஆமாம். கீ படமே பெரிய தாமதத்துக்கு பின் தான் ரிலீஸ் ஆகிறது. இங்கே ஹீரோவாக இருப்பது சிரமமாக தான் இருக்கிறது. காமெடி, குணச்சித்திர நடிகராக இருப்பது எளிது. ஹீரோவாக இருப்பதால் மற்றவர்களின் கால்ஷீட்டுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. சினிமா என்பது டீம் வொர்க். யாராவது ஒருவர் ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது எல்லோரையும் பாதிக்கும்.

ஒரு படத்தில் கமிட் ஆனால் அதை முடித்துவிட்டு அடுத்த படத்துக்கு செல்லுங்கள். படங்களுக்கு முன் தயாரிப்பு பணிகளில் திட்டமிடல் மிகவும் அவசியம். #KEE #Jiiva #NikkiGalrani

Tags:    

Similar News