சினிமா

பிரச்சனைகளுக்கு நடுவே தயாரிப்பாளர் சங்க செயற்குழு இன்று கூடுகிறது

Published On 2018-12-24 08:03 GMT   |   Update On 2018-12-24 08:03 GMT
தயாரிப்பாளர் சங்க செயற்குழு இன்று கூடவிருக்கும் நிலையில், சமீபத்தில் சங்கத்தை பூட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #ProducersCouncil #TFPC #Vishal
தயாரிப்பாளர் சங்க அலுவலகம் சென்னை அண்ணாசாலையில் இயங்கி வருகிறது. நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தியாகராய நகரில் உள்ள யோகாம்பாள் தெருவில் வாடகைக்கு இடம்பார்த்து அங்கு அலுவலகத்தை மாற்றினார். 

இந்த நிலையில் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தயாரிப்பாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டு அலுவலகங்களையும் பூட்டினார்கள். அலுவலக பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார். கோர்ட்டு உத்தரவின் பேரில் தற்போது இந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. 

இந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா சாலையில் உள்ள சங்க அலுவகத்தில் விஷால் தலைமையில் இன்று மாலை நடக்கிறது.



இதில் துணைத்தலைவர்கள் பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஆர்.வி.உதயகுமார், ஆர்யா, பார்த்திபன், எஸ்.எஸ்.குமரன், பாண்டிராஜ், சுந்தர்.சி, மன்சூர் அலிகான், ராமச்சந்திரன், மனோஜ்குமார், ஜெமினி ராகவா, பிரவீன்காந்த், எ.வி.தங்கராஜ், கே.பாலு, அன்புதுரை உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பிரச்சினை குறித்து விவாதிக்கப்படுகிறது. பூட்டு போட்டு போராட்டம் நடத்திய 15-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களை அடையாளம் கண்டு பட்டியல் தயாரித்து உள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்புவது குறித்து செயற்குழுவில் முடிவு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சங்கத்துக்கு நிதி திரட்ட நடத்தப்படும் இளையராஜா இசைநிகழ்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #ProducersCouncil #TFPC #Vishal

Tags:    

Similar News