சினிமா

கம்பீர குரல் கொண்ட கே.ஆர்.ராம்சிங் டி.ஆர்.ராஜகுமாரிக்கு ஜோடியாக நடித்தார்

Published On 2019-01-28 17:35 GMT   |   Update On 2019-01-28 17:35 GMT
தமிழ்ப்பட உலகில் சிம்மக்குரலில் வசனம் பேசி புகழ் பெற்றவர் சிவாஜிகணேசன். அவரையடுத்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிறந்த குரல் வளம் படைத்தவர்.
தமிழ்ப்பட உலகில் சிம்மக்குரலில் வசனம் பேசி புகழ் பெற்றவர் சிவாஜிகணேசன். அவரையடுத்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிறந்த குரல் வளம் படைத்தவர். இவர்களையடுத்து, கம்பீரமான குரல் கொண்ட நடிகர் கே.ஆர்.ராம்சிங்.

கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் விளங்கியவர். பிற்காலத்தில் நூற்றுக்கணக்கான "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுத்தவர்.

கே.ஆர்.ராம்சிங், 1915-ல் நாகர்கோவிலில் பிறந்தார். தந்தை பெயர் ரூப்சந்திரலால். தாயார் ராதாபாய். இவர்கள் ராஜபுத்திர வம்சாவழியினர்.

நாகர்கோவில் இந்து உயர்நிலைப்பள்ளியில் "இன்டர் மீடியட்'' (தற்போதைய "பிளஸ்-2'') வரை படித்தார்.

பள்ளியில் படிக்கும்போதே, ராம்சிங்கிற்கு நாடகத்தின் மீது ஆர்வம் மிகுந்திருந்தது. அதை அவரது பெற்றோர்கள் விரும்பவில்லை. இந்த சமயத்தில் அவரது தகப்பனார், உடல் நலம் குன்றி இறந்து போனார். அப்போது ராம்சிங்குக்கு வயது 15. நாடகத்தின் மீதிருந்த ஆர்வத்தில் தன் குடும்பத்தை விட்டு வெளியேறி ஒவ்வொரு நாடகக் கம்பெனிக்கும் ஏறி இறங்கி வாய்ப்புகள் கேட்டார். சிறு, சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவ்வாறு தொடங்கிய இவரது நாடக பிரவேசம், சில ஆண்டுகளில் அவரை சிறந்த நடிகராக மிளிரச் செய்தது.

தனது நடிப்பால், கணீரென்ற குரல் வளத்தால் புகழ் பெற்ற இவரை காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார் நடத்தி வந்த "ஸ்ரீராமபால கான வினோத சபா'' என்ற நாடகக் கம்பெனி நடிக்க அழைத்தது. இந்த நாடகக் கம்பெனியில் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் ஆர்.முத்துராமன், எம்.கே.முஸ்தபா, "சட்டாம்பிள்ளை'' வெங்கட்ராமன், எம்.எஸ்.எஸ்.பாக்கியம், எஸ்.எம்.ராமநாதன் போன்ற கலைஞர்கள் அப்போது நடித்து வந்தனர்.

கே.ஆர்.ராம்சிங், கம்பீர தோற்றம் கொண்டவர். "புயலுக்குப்பின்'' என்ற நாடகத்தில், ஒற்றைக்கால் சர்வாதிகாரியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

பின்னர், "திருமழிசை ஆழ்வார்'' பக்தி நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் சென்னையில் தொடர்ந்து 400 நாட்கள் நடந்தது.

நாடகத்தில் புகழ் பெற்று விளங்கிய ராம்சிங்குக்கு, சினிமா வாய்ப்பு தேடி வந்தது.

1947-ல் ஜகன்னாத் புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனம், "விஸ்வாமித்ரா'' என்ற படத்தை தயாரித்தது. கதாநாயகியாக, அன்றைய "கனவுக்கன்னி'' டி.ஆர்.ராஜகுமாரியும், கதாநாயகனாக ராம்சிங்கும் நடித்தனர். இப்படத்திற்கு பம்மல் சம்பந்த முதலியார் ("மனோகரா'' கதையை எழுதியவர்) வசனம் எழுதினார்.

தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது. இந்தியிலும் ராம்சிங்தான் கதாநாயகன். இப்படம் வெற்றி பெறவில்லை. எனவே, ராம்சிங் மீண்டும் நாடக உலகுக்கே திரும்ப வேண்டியதாயிற்று. "ஜீவன்'', "பிலோமினாள்'', "எதிர்பாராதது'' உள்பட பல நாடகங்களில் நடித்தார்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு, திரைப்படத்துறை மீண்டும் அழைத்தது.

டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் தயாரித்த "மின்னல் வீரன்'' திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தில், ரஞ்சன் கதாநாயகனாகவும், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா கதாநாயகியாகவும் நடித்தனர். "புயல்'' என்ற படத்திலும் வில்லனாக ராம்சிங் நடித்தார்.

ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த "கன்னியின் காதலி'' படத்தில் வில்லனாக நடித்தார். அஞ்சலிதேவி, மாதுரிதேவி, எஸ்.ஏ.நடராஜன் நடித்த இப்படத்தில்தான், கவிஞர் கண்ணதாசன் முதன் முதலாக பாடல் எழுதினார்.

கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்த "விஜயகுமாரி'' படத்தில் ஒற்றைக்கால் மந்திரவாதியாக வில்லன் வேடத்தில் பிரமாதமாக நடித்தார், ராம்சிங்,

பிரபல இயக்குனர் கே.ராம்நாத் டைரக்ட் செய்த படம் இது.

1958-ல் எம்.ஜி.ஆர். பிரமாண்டமாக தயாரித்த "நாடோடி மன்னன்'' படத்தில், பானுமதியின் தந்தையாக மீண்டும் ஒற்றைக்காலுடன் நடித்தார். இந்தப்படம் அவருக்கு புகழ் தேடித்தந்தது.

இதன்பின், எம்.ஜி.ஆர் - சாவித்திரி நடித்த "மகாதேவி'' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். எம்.ஜி.ஆரின் கண்களை குருடாக்குவது போலவும், பிறகு அவரை காப்பாற்றுவது போலவும் ராம்சிங் நடித்தது, ரசிகர்களைக் கவர்ந்தது.

சிவாஜி - ஜமுனா இணைந்து நடித்த "மருதநாட்டு வீரன்'' படத்தில், பி.எஸ்.வீரப்பாவும், ராம்சிங்கும் வில்லன்களாக நடித்தனர்.

பிறகு "நாகநந்தினி'', "தோழன்'' ஆகிய படங்களில் ராம்சிங் நடித்தார். இதில் "தோழன்'' படத்தில் அவருக்கு மீண்டும் ஒற்றைக்கால் வேடம்!

இந்தி, தெலுங்கு முதலான மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்கள் தமிழில் "டப்'' செய்யப்பட்டபோது, முக்கிய நடிகர்களுக்கு குரல் கொடுத்தவர், ராம்சிங்.

ராஜ்கபூரின் "ஆ'' என்ற படம் தமிழில் "அவன்'' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டபோது, ராஜ்கபூரின் தந்தை பிருதிவிராஜ் கபூருக்கு ராம்சிங் குரல் கொடுத்தார்.

அவர் குரல் பிருதிவிராஜ் கபூரை வெகுவாகக் கவர்ந்தது. பின்னர் திலீப்குமார் - பிருதிவிராஜ்கபூர் நடித்த பிரமாண்டமான "மொகல் - ஏ - ஆஜாம்'' என்ற படம் தமிழில் "அக்பர்'' என்ற பெயரில் `டப்' செய்யப்பட்டபோது, தனக்கு குரல் கொடுக்கும்படி ராம்சிங்கிடம் பிருதிவிராஜ் கபூர் கேட்டுக்கொண்டார். அதன்படி அக்பராக நடித்த பிருதிவிராஜ் கபூருக்கு குரல் கொடுத்தார், ராம்சிங்.

இடையே "தாழம்பூ'', "ஆசை முகம்'', "அஞ்சல் பெட்டி 520'', "பாட்டொன்று கேட்டேன்'', "பாக்தாத் பேரழகி'', "அரசகட்டளை'', "ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது'', "துணிவே துணை'' முதலிய படங்களில் நடித்தார்.

பிறகு நடிப்பை குறைத்துக்கொண்டு, "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுப்பதில் கவனம் செலுத்தினார். நூற்றுக்கணக்கான "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுத்தார். விட்டலாச்சார்யா படங்களில், தெலுங்கு வில்லன் நடிகர் ராஜ்நளாவுக்கு பெரும்பாலும் குரல் கொடுத்தவர், ராம்சிங்தான்.

பல நாடகங்களிலும், திரைப்படங்களிலும், ஒற்றைக்கால் வில்லனாக, ஒரு காலை கயிற்றால் மடக்கிக் கட்டிக்கொண்டு நடித்ததால், அவரது இடது காலில் ரத்தம் உறைய ஆரம்பித்தது. சரியான சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல், தொழிலில் கவனமாக இருந்ததால், உடல் நலம்

குன்றியது.கோடம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் 1985 அக்டோபர் 18-ந்தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 70.

ராம்சிங்கின் மனைவி பெயர் லட்சுமி.

இவர்களுக்கு சந்திரமோகன், ரவீந்தர் என்ற மகன்களும், ரோகிணி என்ற மகளும் உள்ளனர்.

தமிழக அரசின் "கலைமாமணி'' பட்டம் உள்பட பல விருதுகளும், பரிசுகளும் பெற்றவர், ராம்சிங்.
Tags:    

Similar News