சினிமா

பாலசந்தருக்கு பிடித்தமான "டாப் 10''

Published On 2019-01-18 17:59 GMT   |   Update On 2019-01-18 17:59 GMT
தனக்குப் பிடித்தமான 10 திரைப்படங்கள் எவை என்பதற்கு கே.பாலசந்தர் பதில் அளித்தார்.
கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று பல்வேறு துறைகளிலும் பாலசந்தர் பணியாற்றிய படங்கள் 125. (தமிழ் 87; தெலுங்கு 19; இந்தி 7; கன்னடம் 8; மலையாளம் 4)

டைரக்ட் செய்தவை: படங்கள், டெலிவிஷன் தொடர்கள் உள்படமொத்தம் 100.

"நீங்கள் இயக்கிய படங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்களைச் சொல்லுங்கள்'' என்று பாலசந்தரிடம் கேட்கப்பட்டது.

அவர் சிரித்துக்கொண்டே, "பத்துக்குள் அடக்குவது சிரமம். எனினும் சிரமப்பட்டு சொல்கிறேன்.

1. அபூர்வ ராகங்கள், 2. பாமா விஜயம், 3. மரோசரித்ரா, 4. தண்ணீர் தண்ணீர், 5. சிந்து பைரவி, 6. வறுமையின் நிறம் சிவப்பு, 7. வானமே எல்லை, 8. புன்னகை மன்னன், 9. அச்சமில்லை அச்சமில்லை, 10. கல்கி.

மேற்கண்டவாறு கூறிய பாலசந்தர், "படங்களின் பெயர்களைத்தான் கூறியிருக்கிறேனே தவிர, தரத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்தவில்லை'' என்றார்.

"உங்களுடன் தொடர்பு இல்லாத படங்களில் உங்களை மிகவும் கவர்ந்த 10 படங்கள் எவை?'' என்று கேட்டதற்கு, பாலசந்தர் கூறியதாவது:-

தமிழில் கல்யாணபரிசு, திரும்பிப்பார், 16 வயதினிலே, தில்லானா மோகனாம்பாள், கன்னத்தில் முத்தமிட்டால்... ஆகிய படங்கள் பிடிக்கும்.

ஆங்கிலத்தில் "ரோமன் ஹாலிடே'', "சைக்கோ'' ஆகிய படங்களும், இந்தியில் "தோ ஆங்கேன் பாராஹாத்'', "மொகல் ஏ ஆஜாம்'', "பிளாக்'' ஆகிய படங்களும் என்னைக் கவர்ந்தவை.

இவற்றையும் நான் தரத்தின்படி வரிசைப்படுத்தவில்லை.''

இவ்வாறு கூறினார், பாலசந்தர்.

பாலசந்தர் டைரக்ட் செய்யும் 101-வது படம் "பொய்.'' இதை நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் கேசட் வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. கேசட்டை கமலஹாசன் வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். சிவகுமார், சரிதா, சுகாசினி உள்பட, பாலசந்தர் படங்களில் நடித்த அனைத்து நடிகர்-நடிகைகளும் விழாவில் கலந்து கொண்டனர்.

திரை உலக மேதைகளில் ஏவி.மெய்யப்ப செட்டியார், ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆகியோரிடம் பாலசந்தர் பெருமதிப்பு வைத்திருந்தார்.

ஏவி.எம். பற்றி அவர் குறிப்பிட்டதாவது:-

"ஏவி.எம். அவர்களுடன் சேர்ந்து ஒரு படத்திற்கு பணிபுரியும்போது தெரிந்து கொள்ளும் விஷயங்கள் வெளியே பத்து படங்கள் செய்யும்போது கிடைக்கும் விஷயங்களுக்கு சமம் ஆகும்.

படத்தின் `ரஷ்' போட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, `இங்கு ஒரு பிரேமை வெட்டு' என்பார். அதனால் என்ன மாற்றம் நேரப்போகிறது என்று நம்மால் அப்போது கற்பனை பண்ண முடியாது. அவர் கூறியபடியே செய்த பிறகுதான் அதனுடைய மகத்துவம் தெரியும்.

"மேஜர் சந்திரகாந்த்'' படம் முடிந்தபின், நாங்கள் படம் முழுவதையும் பார்த்த பிறகு, படத்தைப்பற்றி என் கருத்தை ஏவி.எம். கேட்டார். "வசூலைப் பொறுத்தவரையில்தான் பயமாக இருக்கிறது'' என்றேன்.

"படம் எப்படி வேண்டுமானாலும் ஓடட்டும். ஆனால் ஏவி.எம். சார்பில் இப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்'' என்றார், ஏவி.எம்.

படம் வெளியானதும், ஒரு பத்திரிகை "இது காசுக்காக எடுத்த படம் அல்ல; ஆசைக்காக எடுத்த படம்'' என்று எழுதியது. ஆம்; ஏவி.எம்.கருத்தையே விமர்சனம் பிரதிபலித்தது. ஆம்; அவர் கணிப்பு வென்றது.''

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

சொந்த முயற்சியினாலும், திறமையினாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்ற முறையில் ஜெமினி எஸ்.எஸ்.வாசனிடம் பிரமிப்பு கலந்த மரியாதை கொண்டவர், பாலசந்தர்.

"எஸ்.எஸ்.வாசனை முன்னோடியாகக் கொண்டு உழைக்கும் எவரும் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள்'' என்று அடிக்கடி பலரிடம் கூறுவார்.

நடிகர் ஜெமினிகணேசனுடன் பாலசந்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் விசித்திரமானவை.

அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

"1949-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இறங்கினேன். முதலாவதாக வேலை கேட்டு, ஜெமினி ஸ்டூடியோவுக்கு மனு அனுப்பினேன்.

சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், "தங்களுக்கு தற்போது வேலை தரமுடியாத நிலையில் இருக்கிறோம். தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை இருக்கும்போது, தங்களுக்குத் தகவல் தரப்படும்'' என்று அதில் எழுதியிருந்தது. கீழே ஆர்.கணேஷ் என்று கையெழுத்து போடப்பட்டிருந்தது.

"சந்தர்ப்பம் இல்லை'' என்கிற அந்தக் கடிதத்திலாவது மதிப்பிற்குரிய எஸ்.எஸ்.வாசன் அவர்கள் கையெழுத்து இருக்கும் என்று நினைத்து ஏமாந்தேன். என்றாலும் எனது அபிமான ஸ்டூடியோவிலிருந்து வந்த கடிதம் ஆதலால், அதை பெரும் பொக்கிஷம் போலக் கருதி பல ஆண்டுகள் பாதுகாத்து வந்தேன்.

பல ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதத்தை நான் மீண்டும் எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, அதில் கையெழுத்திட்டு இருந்த ஆர்.கணேஷ்தான், பிற்காலத்தில் மிக புகழ் பெற்று விளங்கிய ஜெமினிகணேசன்!

கமலஹாசனுக்கு அடுத்தபடியாக எனது டைரக்ஷனில் அதிக படங்களில் நடித்தவர் ஜெமினிகணேசன். எனக்கு வேலை இல்லை என்று சொன்னவருக்குத்தான் என் படங்களில் அதிக வேலை கொடுத்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.''

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

பாலசந்தர் தொடர்ந்து கூறியதாவது:-

"கலாகேந்திரா'' பட நிறுவனம் எனது தாய் ஸ்தாபனம். துரை, கோவிந்தராஜன், கிருஷ்ணன், செல்வராஜ் நால்வரும் உரிமையாளர்கள்.

நான் அவர்களுக்கு இயக்கி கொடுத்திருக்கும் திரைப்படங்கள் 15-க்கும் மேல். இவர்களைப்போன்ற நண்பர்கள் கிடைப்பது மிகமிகக் கடினம். நண்பர்களுக்காக உயிரையே தருவார் துரை. எனது நாடக நாட்களிலிருந்தே பி.ஆர்.கோவிந்தராஜ் எனக்குப் பக்க பலம். அந்தக் காலங்களில் என் ஓரங்க நாடகங்களில் பெண் வேஷம் போடுவார். அழகான பெண்கள் தோற்றுப் போவார்கள்.

1991-ம் ஆண்டு எனக்கு மிகப்பெரிய இழப்பு துரை, கோவிந்தராஜ் இவர்களுடைய மரணம். ஓரிரு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணன் அகால மரணம் அடைந்தார்.

எனது இன்னொரு பேரிழப்பு எனது அருமை நண்பரும், தயாரிப்பாளருமான அரங்கண்ணல் அவர்கள் மறைவு.

என்னோடு தோளோடு தோள் நின்று என்னுடைய அலுவலக நாட்களிலிருந்தே ஏறத்தாழ நாற்பதாண்டு காலம் உற்ற நண்பனாக, சிறந்த உதவியாளராக, ஆலோசகராக மற்றும் இன்றைய தலைமுறை கலைஞர் பெருமக்களுக்கும், எனக்கும் ஒரு பாலமாக அமைந்த எனது அன்பு அனந்து அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானதுதான் தொழில் துறையில் எனக்கு ஏற்பட்ட ஒரு உச்சகட்ட இழப்பு.''

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டார்.

இருகோடுகள் (1970), அபூர்வ ராகங்கள் (1974), தண்ணீர் தண்ணீர் (1982), அச்சமில்லை அச்சமில்லை (1984) ஆகிய படங்கள், சிறந்த மாநில மொழிப் படங்களுக்கான மத்திய அரசின் விருதைப் பெற்றன.

பாமா விஜயம், தாமரை நெஞ்சம், எதிர்நீச்சல், அக்னிசாட்சி, வறுமையின் நிறம் சிவப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை ஆகிய படங்கள், திரைப்படத்துறையின் பல்வேறு பிரிவுகளில் மாநில அரசின் பரிசுகளை பெற்றன.

தமிழக அரசின் "கலைமாமணி'' விருதை 1973''-லும், "அண்ணா விருதை'' 1992-லும் பாலசந்தர் பெற்றார்.

மத்திய அரசு 1987-ல் "பத்மஸ்ரீ'' விருது வழங்கியது.

அழகப்பா பல்கலைக்கழகமும், சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் "டாக்டர்'' பட்டம் வழங்கி கவுரவித்தன.

மற்றும் பிற மாநில அரசுகள், திரைப்பட அமைப்புகள், பத்திரிகைகள் வழங்கிய விருதுகளும், பரிசுகளும், பட்டங்களும் ஏராளம்.
Tags:    

Similar News