டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சன் மாடல் மேம்படுத்தப்பட்ட XZ ட்ரிம் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அம்சங்களுடன் டாடா நெக்சன் XZ இந்தியாவில் அறிமுகம்
பதிவு: மார்ச் 27, 2018 20:49
புதுடெல்லி:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சன் கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டது. டாடா நிறுவனத்தின் புதிய சப்காம்பேக்ட் எஸ்யுவி வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மேம்படுத்தப்பட்ட நெக்சன் XZ ட்ரிம் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
புதிய சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடலில் மிதக்கும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாய்ஸ் கமாண்டு, ரிவர்ஸ் கேமரா, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், ஓட்டுநர் இருக்கை உயரத்தை மாற்றியமைக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்ட்டு இருக்கிறது.
புதிய நெக்சன் XZ மாடலில் வாய்ஸ் அலெர்ட், ஃபோர் டுவீட்டர்ஸ், டெக்ஸ்ட் மற்றும் வாட்ஸ்அப் ரீட்-அவுட், ஃபேப்ரிக் இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. எனினும் பகலில் எரியும் எல்இடி மின்விளக்குகள், முன்பக்கம் மற்றும் பின்புற ஃபாக் விளக்குகள், பின்புற டீஃபாகர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படவில்லை. புதிய மாடலிலும் 16-இன்ச் டையர்கள், டூயல்-டோன் வீல் கவர்கள் வழங்கப்பட்டுள்ளது.
>
மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் டாடா நெக்சன் XZ மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் டர்போசார்ஜ்டு இன்ஜன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் யூனிட் 108 பிஹெச்பி மற்றும் 170 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. டீசல் வெர்ஷன் 108 பிஹெச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.
இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நெக்சன் XZ மாடல் இகோ, சிட்டி மற்றும் ஸ்போர் என மூன்று வித டிரைவிங் மோட்களை கொண்டுள்ளது. புதிய நெக்சன் XZ மாடல் நெக்சன் டாப்-எண்ட் மாடலுக்கு மத்தியில் அமையும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. சில அம்சங்கள் வழங்கப்படாத புதிய XZ விலை டாப்-எண்ட் மாடலை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நெக்சன் XZ பெட்ரோல் மாடல் விலை ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி), டீசல் மாடல் விலை ரூ.8.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் டாடா மோட்டார்ஸ் நெக்சன் AMT வேரியண்ட் அறிமுகம் செய்திருந்தது. இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.