search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அணியக்கூடிய சாதனங்கள் விற்பனையில் ஆப்பிளை பின்தள்ளிய சீன நிறுவனம்
    X

    அணியக்கூடிய சாதனங்கள் விற்பனையில் ஆப்பிளை பின்தள்ளிய சீன நிறுவனம்

    அணியக்கூடிய சாதனங்களுக்கான சர்வதேச சந்தையில் ஆப்பிளை பின்தள்ளி சீன நிறுவனம் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறது. #Xiaomi



    சர்வதேச அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் மூன்றாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சீன நிறுவனமான சியோமி முதலிடம் பிடித்து இருக்கிறது.

    இந்தியா உள்பட இதர சந்தைகளில் Mi பேன்ட் 3 சாதனம் அதிகளவு விற்பனையை பெற்று வரும் நிலையில், சியோமி நிறுவனம் அணியக்கூடிய சாதனங்களுக்கான சர்வதேச சந்தையில் 21.5 சதவிகித பங்குகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. சியோமி நிறுவனத்தைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 13.1 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (IDC) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. 2018 ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சர்வதேச அணியக்கூடிய சாதனங்கள் விற்பனை 3.2 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு விற்பனையை விட 21.7 சதவிகிதம் அதிகம் ஆகும்.



    சியோமி நிறுவனம் 2018 மூன்றாவது காலாண்டில் மட்டும் சுமார் 69 லட்சம் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்துள்ளது. இதே காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 42 லட்சம் யூனிட்களையும், மூன்றாவது இடம்பிடித்து இருக்கும் ஃபிட்பிட் சுமார் 35 லட்சம் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்திருக்கிறது.

    ஃபிட்பிட், கார்மின் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களின் புது சாதனங்கள் அடிப்படையில் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்து இருக்கிறது என சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. 

    இதுதவிர ஆசிய பசிபிக் சந்தைகளில் (ஜப்பான் தவிர) அணியக்கூடிய சாதனங்களுக்கான வளர்ச்சி அதிகரித்து இருப்பதும் சந்தை வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. #Xiaomi
    Next Story
    ×