search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விலை மட்டும் ஒரு லட்சம், ஆனால் சார்ஜ் ஏறவில்லை - ஐபோன்களால் புதிய சிக்கலில் ஆப்பிள் நிறுவனம்
    X

    விலை மட்டும் ஒரு லட்சம், ஆனால் சார்ஜ் ஏறவில்லை - ஐபோன்களால் புதிய சிக்கலில் ஆப்பிள் நிறுவனம்

    ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஐபோன் மாடல்களில் சார்ஜ் ஏறுவதில் கோளாறு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. #ChargeGate #iPhoneXS
     


    ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஐபோன் மாடல்களில் சீராக சார்ஜ் ஆவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    ஆவலுடன் புதிய ஐபோன் மாடல்களை வாங்கி சென்ற ஆப்பிள் பிரியர்கள் தங்களது புதிய ஐபோன் சரியாக சார்ஜ் ஆவதில்லை, அடிக்கடி ஹேங் ஆகிறது போன்ற குற்றச்சாட்டுகளை ஆப்பிள் வாடிக்கையாளர் சேவை மையங்கள், ரெடிட், மேக்ரூமர் படிவம், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

    புதிய ஐபோன்களில் பிரச்சனை இருப்பதை பிரபல யூடியூப் சேனலில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபல யூடியூபர் லீவிஸ் ஹில்சென்டெகர் கூறும் போது, ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் சார்ஜ் ஆவதில்லை என்ற குற்றச்சாட்டை நூற்றுக்கும் அதிகமானோர் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சில ஐபோன்கள் சார்ஜ் செய்யும் போது ஹேங் ஆவதாகவும், ரீசெட் செய்தால் தான் போன் இயல்பு நிலைக்கு திரும்புவதாக தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

    பிரச்சனையை புரிந்து கொள்ள ஹில்சென்டெகர் எட்டு ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களை அவற்றுடன் வழங்கப்பட்ட சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தார். எட்டு ஐபோன்களில் வெறும் இரண்டு மாடல்களில் மட்டுமே சரியாக சார்ஜ் ஆனது. மற்ற ஆறு ஐபோன்களில் ஐந்து மாடல்களில் ஸ்கிரீன் வேக்கப் ஆகும் வரை சார்ஜ் ஆகவில்லை. ஒரு ஐபோன் XS மேக்ஸ் எப்படி முயன்றும் சார்ஜ் ஆகவேயில்லை, மேலும் சார்ஜ் செய்ய முயன்ற போது பலமுறை ஹேங் ஆனது. 



    ஆப்பிள் நிறுவனம் பல லட்சம் யூனிட்கள் விற்பனை செய்து வரும் நிலையில், பிரச்சனையை சில சோதனைகள் மற்றும் ஆன்லைன் விமர்சனங்களால் மட்டுமே உறுதி செய்ய முடியாது. குறிப்பாக சில பயனர்கள் மாற்றப்பட்ட சாதனங்களிலும் இதே பிரச்சனை எழுவதாக தெரிவித்துள்ளனர்.

    சில பயனர்கள் தங்களது லைட்னிங் கேபிளை சற்று அசைத்தால் சார்ஜ் ஆவதாக தெரிவித்துள்ளனர். எனினும் இப்போதைய சூழலில் வயர்லெஸ் சார்ஜர் மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கிறது. தொடர்ந்து வயர்லெஸ் சார்ஜர் பயன்படுத்தும் போது பேட்டரி ஆயுள் எளிதில் பாழாகி விடும். மேலும் ஆப்பிள் புதிய ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களின் பேட்டரியை மாற்ற அதிக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

    தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. மேலும் பிரச்சனை மென்பொருள் அப்டேட் மூலம் சரிசெய்யப்படுமா அல்லது பெரியளவில் விற்பனையான போன்களை திரும்ப பெற்று அவை சரி செய்யப்படுமா என்ற கேள்விகளுக்கு, ஆப்பிள் விளக்கத்தை அறிந்து கொள்ள புதிய ஐபோன் வாங்கியவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

    முன்னதாக ஆப்பிள் டெக் சப்போர்ட் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து, போன்களை மாற்றி வழங்க வேண்டி இருக்கும் என்ற பரிந்துரையை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய ஐபோன் மாடல்களில் ஹார்டுவேர் கோளாறு இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 

    எனினும் ஆப்பிள் இதுகுறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. #ChargeGate #iPhoneXS

    புதிய ஐபோன் கோளாறுகளை விளக்கும் பிரபல யூடியூபரின் வீடியோவை கீழே காணலாம்..,


    Next Story
    ×