search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஜிகாஃபைபருக்கு போட்டியாக இப்போதே சலுகையை மாற்றிய ஏர்டெல்

    ஜியோ ஜிகாஃபைபர் சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் பாரதி ஏர்டெல் நிறுவன பிராட்பேன்ட் சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாரதி ஏர்டெல் பிராட்பேன்ட் சேவையை மாற்றியமைத்து இருக்கிறது. முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் தினசரி டேட்டா கட்டுப்பாடு அளவு நீக்கப்பட்டு இருக்கிறது. ஜியோ பிராட்பேன்ட் சேவைகளில் 1Gbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்பட இருக்கும் நிலையில், பிராட்பேன்ட் சந்தையில் சேவையை வழங்கும் மற்ற நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி சூழல் ஏற்பட இருக்கிறது.

    ஐதராபாத் வட்டாரத்தில் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகள் ரூ.349 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.1,299 வரை வழங்கப்படுகிறது. ஆறு மாதம் மற்றும் ஒருவருடத்திற்கான பிராட்பேன்ட் சலுகைகளை தேர்வு செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 20% வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

    புதிய மாற்றங்களை தொடர்ந்து ஐதராபாத் நகரில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் அதிவேக இன்டர்நெட் இணைப்பு எவ்வித டேட்டா கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்த முடியும். இதே போன்ற சலுகைகள் ஐதராபாத் தவிர மற்ற நகரங்களில் ஏர்டெல் பிராட்பேன்ட் பயன்படுத்துவோருக்கு வழங்கப்படவில்லை. சென்னையில் ரூ.999 விலைக்கு 300 ஜிபி டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.



    ஐதராபாத்தில் ரூ.349 பிராட்பேன்ட் சேவையை தேர்வு செய்வோருக்கு 8Mbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படுகிறது, இதேபோன்று ரூ.1,299 சேவையில் அதிகபட்சம் 100Mbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படுகிறது. இத்தகைய வேகத்தை கொண்டு மின்னஞ்சல், ஆடியோ அல்லது வீடியோ தரவுகளை டவுன்லோடு செய்யவும், இணையத்தில் பிரவுசிங் செய்யவும் முடியும்.

    எனினும் ஜியோ ஜிகாஃபைபர் சேவைகள் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கான முன்பதிவுகள் இந்தியா முழுக்க 1,100 நகரங்களில் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் துவங்க இருக்கிறது.

    ஏர்டெல் சேவைகளில் அன்லிமிட்டெட் டேட்டா சீரான வேகத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும், இவற்றில் உண்மையில் குறிப்பிட்ட அளவு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டும் வணிகமில்லா பயன்பாடுகளுக்கு அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மாதம் 3000 ஜிபி-க்கும் அதிக டேட்டா பயன்படுத்தப்படுவதை வணிக ரீதியிலானவை என ஏர்டெல் குறிப்பிடுகிறது.

    அன்லிமிட்டெட் டேட்டா சலுகையில் முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் ஏர்டெல் நிறுவனம் ரூ.349, ரூ.449, ரூ.699 மற்றும் ரூ.1,299 விலையில் நான்கு சலுகைகளை அறிவித்திருக்கிறது. கடந்த மாதம் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகளை ஒரு வருடத்திற்கு வாங்குவோருக்கு 20% தள்ளுபடி வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது. இதேபோன்று ஆறு மாதத்திற்கு கட்டணம் செலுத்துவோருக்கு 15% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை நாட்டில் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×