search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஏர்செல் சரிவில் சிரிக்கும் பி.எஸ்.என்.எல்.
    X

    ஏர்செல் சரிவில் சிரிக்கும் பி.எஸ்.என்.எல்.

    ஏர்செல் சேவை பெரும்பாலான மாநிலங்களில் முடங்கி வரும் நிலையில் தமிழக ஏர்செல் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவையில் இணைந்து வருகின்றனர்.
    புதுடெல்லி:

    ஏர்செல் சேவைகள் தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 1.86 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவையில் இணைந்துள்ளனர். 

    தமிழ் நாட்டில் மட்டும் சரியாக 1,86,135 வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவையில் இணைந்திருக்கின்றனர். சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர தமிழ் நாடு முழுக்க இத்தனை வாடிக்கையாளர்கள் ஏர்செல் நெட்வொர்க்கில் இருந்து பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கிற்கு மாறியுள்ளனர்.

    மொபைல் நம்பர் போர்டபிலிட்டி கோரியிருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிக சுலபமாக பி.எஸ்.என்.எல். சேவையில் மாறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான வழிமுறைகளுக்கு பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மத்திய டெலிகாம் துறையுடன் இணைந்து போர்ட்டிங் இன் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என பி.எஸ்.என்.எல். தமிழ் நாடு தலைமை பொது மேளாலர் ஆர். மார்ஷல் அந்தோனி லியோ தெரிவித்துள்ளார்.

    தமிழ் நாடு டெலிகாம் வாடிக்கையாளர்களில் 10% வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல். வைத்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில் தற்சமயம் வரை சுமார் 82.5 லட்சம் பேர் பி.எஸ்.என்.எல். சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் நம்பர் போர்டபிலிட்டி அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஒவ்வொரு மாதமும் பி.எஸ்.என்.எல் சேவையில் இணைவோர் எண்ணிக்கை சுமார் 1.5 லட்சமாக இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஏர்செல் சேவையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு காரணமாக பி.எஸ்.என்.எல். சேவையில் இணைவோர் எண்ணிக்கை மூன்று முதல் நான்கு லட்சம் வரை அதிகரிக்கலாம் என லியோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 4ஜி சேவைகள் வழங்குவது குறித்த கேள்விக்கு சரியான தேதியை அவர் தெரிவிக்கவில்லை.
    Next Story
    ×