search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸி.யை வீழ்த்த கையாண்ட யுக்தி என்ன?- ஹர்திக் பாண்டியாவுடன் விவாதித்ததை நினைவு கூர்ந்தார் விராட் கோலி
    X

    ஆஸி.யை வீழ்த்த கையாண்ட யுக்தி என்ன?- ஹர்திக் பாண்டியாவுடன் விவாதித்ததை நினைவு கூர்ந்தார் விராட் கோலி

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ஹர்திக் பாண்டியாவிற்கு முழு சுதந்திரம் கொடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 9-ந்தேதி) நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 117 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 316 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆகி தோல்வியை சந்தித்தது.

    4-வது வீரராக களம் இறக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 27 பந்தில் 48 ரன்கள் விளாசினார். இந்திய அணி 352 ரன்கள் குவிப்பதற்கு இவரது அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

    வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியா உடனான போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 4-வது வரிசையில் ஹர்திக் பாண்டியாவை களமிறக்கியது வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. ஏனென்றால் அந்த இடத்தில் பாண்டியாவை களமிறக்க வேண்டும் என்பது பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகம் எடுத்த முடிவாகும்.


    பாண்டியா களத்திற்கு வந்த உடன் தனது இயல்பான ஆக்ரோசம் மிகுந்த ஆட்டத்தினை ஆட என்னிடம் அனுமதி கேட்டார். அந்த சூழ்நிலையில் நாங்கள் 220 ரன்கள்தான் (37 ஒவர்) எடுத்திருந்தோம். ஒருவேளை தனது ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது பாண்டியா ‘அவுட்’ ஆனாலும் அடுத்து களமிறங்கும் டோனி போன்ற வீரர்கள் நிலமையை கட்டுப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

    ஆகையால் பாண்டியா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதி அளித்தேன். அதன் விளைவாக பாண்டியா 48 ரன்கள் (27 பந்துகள்) விளாசினார். பின்னர் வந்த டோனியும் அதிரடியாக ஆடி 27 ரன்கள் (14 பந்துகள்) எடுத்தார். டோனி மற்றும் பாண்டியா போன்ற வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலகக்கோப்பையில் இந்திய அணி இரண்டு வெற்றிகள் (தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா) பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் வரும் 13-ந்தேதி( வியாழக்கிழமை) நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற உள்ள 18-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×