search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மாவின் சிறந்த இன்னிங்ஸ்- விராட் கோலி பாராட்டு
    X

    ரோகித் சர்மாவின் சிறந்த இன்னிங்ஸ்- விராட் கோலி பாராட்டு

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ரோகித் சர்மாவின் ஆட்டம் அற்புதமாக இருந்ததாகவும் அவரது சிறந்த ஒருநாள் போட்டி இன்னிங்ஸ் இது என்றும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.
    சவுதம்டன்:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று சவுதம்டனில் நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இந்தியாவின் அபார பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியது.

    தொடக்கத்தில் பும்ராவின் வேகப்பந்து நன்கு எடுப்பட்டது. அவரது பந்தில் தொடக்க வீரரர்கள் அம்லா (6 ரன்), டி காக் (10) ஆகியோர் அவுட் ஆனார்கள்.

    அதன்பின் விக்கெட்டுகளை பறிகொடுக்க கூடாது என்று தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினர். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹல், குல்தீப்யாதவ் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

    துஸ்சென் (22), டுபிஸிஸ் சிஸ் (38), மில்லர் (31) ஆகியோர் சாஹல் பந்திலும், டுமினி (3) குல்தீப் யாதவ் பந்திலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

    அதன்பின் பெலுக் வாயோ (34), கிறிஸ் மோரிஸ் (42) ஜோடி தாக்கு பிடித்து விளையாடியது. தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன் எடுத்தது. இந்தியா தரப்பில் சாஹல் 10 ஓவர் வீசி 51 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    புவனேஸ்வர்குமார், பும்ரா தலா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 228 ரன் இலக்கை நோக்கி இந்தியா விளையாடியது. ஆடுகளம் வேகப்பந்துக்கு நன்கு ஒத்துழைத்தது. அடிக்கடி பந்து பவுன்ஸ் ஆனது.

    தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் பொறுமையாக விளையாடினர். ஆனால் தவான் 8 ரன்னிலும், கோலி 18 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    அதன் பிறகு ரோகித் சர்மா- லோகேஷ் ராகுல் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ரோகித் சர்மா தனது அனுபவத்தை வெளி காட்டினார்.

    ராகுல் 26 ரன்னிலும், டோனி 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் நிலைத்து நின்று விளையாடிய ரோகித் சர்மா சதம் அடித்தார். அவரது சிறந்த ஆட்டத்தால் இந்தியா 47.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 230 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    ரோகித் சர்மா 122 ரன்னிலும், ஹர்த்திக் பாண்ட்யா 15 ரன்னிலும் அவுட் ஆகாமல் இருந்தனர். பந்து வீச்சுக்கு சாதகமான ஆடு களத்தில் ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடி வெற்றி பெற வைத்தது பாராட்டும் வகையில் இருந்தது.

    வெற்றி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    எங்களை பொறுத்தவரை வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்கியிருப்பது முக்கியமானது. நாங்கள் ரன்-ரேட்டில் அதிக வித்தியாசம் பெறாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஆட்டத்தில் ஆடுகளம் எவ்வாறு பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காது என்பதை பார்க்க வேண்டும். இது கடும் சவாலாக இருந்தது.

    ரோகித் சர்மா ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவரது சிறந்த ஒருநாள் போட்டி இன்னிங்ஸ் இதுவாகும். பந்து வீசியபோது ஒரு குழுவாக நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம்.

    தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு நன்றாக இருந்ததால் பேட்டிங்கில் நாங்கள் கடினமாக உழைக்க வேண்டியது இருந்தது. ஆனால் ரோகித் சர்மா ஆட்டம் மிக மிக சிறப்பானது. அவருடன் லோகேஷ் ராகுல் இணைந்து நன்றாக பேட்டிங் செய்தார்.

    டோனி சிறந்த நிதானத்தை வெளிப்படுத்தி விளையாடினார். அதே போல் ஹர்த்திக் பாண்ட்யா ஆட்டத்தை சிறப்பாக முடித்தார்.

    பும்ராவின் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாமல் திணறுகிறார்கள். அவர் கடும் நெருக்கடி கொடுத்து தவறு செய்ய வைத்து விக்கெட்டை வீழ்த்துகிறார். ஹசிம் அம்லா இதற்கு முன்பு இப்படி அவுட் ஆகி நான் பார்த்ததில்லை. சாஹல் அருமையாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தார்.

    நாங்கள் வலுவான அணியாக பேட்டிங்கில் இருக்கிறோம். அதற்கு ஏற்ற வகையில் அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு தொழில்முறை வெற்றியை பெற்று இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூ னார்.

    முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் வருகிற 9-ந்தேதி  மோதுகிறது.

    தென்ஆப்பிரிக்கா தான் மோதிய 3 ஆட்டங்களிலும் தோற்று உள்ளது.
    Next Story
    ×