search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    • நிர்வாணமாக உடற்பயிற்சி செய்யும் போது தனித்துவமான அணுகுமுறையை பின்பற்றியதாகவும், இதன் மூலம் எடை குறிப்பிட்ட அளவு குறைந்ததாகவும் கூறுகிறார்கள்.
    • பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பிரேசில் நாட்டின் சாவ் பாலோ பகுதியை சேர்ந்த ஜோடி பெல்லா மாண்டோவானி- வாக்னர் ஒபெரா. இந்த ஜோடியினர் தங்கள் உடற்பயிற்சி கூடத்தில் நிர்வாணமாக உடற்பயிற்சி செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் அங்கு நிர்வாணமாக உடற்பயிற்சி செய்யும் போது தனித்துவமான அணுகுமுறையை பின்பற்றியதாகவும், இதன் மூலம் எடை குறிப்பிட்ட அளவு குறைந்ததாகவும் கூறுகிறார்கள்.

    மேலும் அதிக கலோரிகள் கிடைத்ததாகவும், இந்த முயற்சி தங்களின் பிணைப்பை வலுப்படுத்த உதவியது மட்டுமின்றி, உடல் தகுதிக்கும் பங்களித்ததாக ஜோடியினர் தெரிவித்தனர்.

    இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிய நிலையில், பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • வாழ்க்கையில் ரெயில் நிலையம் முக்கிய பங்கு வகித்த நிலையில், தனக்கு பிடித்த ரெயில் நிலையத்தின் பெயரை தனது பெயரில் சேர்க்க கவேஜா விரும்பினார்.
    • தனது மகள்களுடன் விவாதித்த போது அவர்கள் ரெஹானா கவேஜா என்ற அவரது பெயரின் நடுவில் அந்த ரெயில் நிலைய பெயரை இணைக்க அறிவுறுத்தினர்.

    இங்கிலாந்து நாட்டில் மேற்கு லண்டனில் உள்ள மேரி லேபோன் ரெயில் நிலையத்தில் ரெஹானா கவேஜா என்ற பெண் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். அங்கு ஆபரேட்டர் நெட்வொர்க் பணியில் தொடங்கிய அவரது பயணம் பாதுகாப்பு பிரிவு மேலாளர் வரை உயர்ந்தது. அவரது வாழ்க்கையில் ரெயில் நிலையம் முக்கிய பங்கு வகித்த நிலையில், தனக்கு பிடித்த ரெயில் நிலையத்தின் பெயரை தனது பெயரில் சேர்க்க கவேஜா விரும்பினார்.

    அதன்படி கவேஜா, மேரி லேபோன் என்ற ரெயில் நிலையத்தின் பெயரை தனது பெயரில் முதல் பெயராக இணைக்க முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது மகள்களுடன் விவாதித்த போது அவர்கள் ரெஹானா கவேஜா என்ற அவரது பெயரின் நடுவில் அந்த ரெயில் நிலைய பெயரை இணைக்க அறிவுறுத்தினர். அதன்படி அவரும் பெயரை மாற்றி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது என் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதி ஆகும். இப்போது நான் அதை அதிகாரப்பூர்வமாக என்னுடன் எடுத்து செல்வேன், இது மிகவும் உற்சாகமானது என குறிப்பிட்டார்.

    • ரமலான் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல குண்டு வெடிப்பு.
    • காலை 8 மணியளவில் வங்கி வெளியே காத்திருந்த மக்களை குறிவைத்து குண்டு வெடித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் இன்று நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    மார்ச் 11 அன்று இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில், சில சம்பவங்களை தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    மத்திய காந்தஹார் நகரத்தில் உள்ள நியூ காபூல் வங்கிக் கிளைக்கு வெளியே இன்று காலை 8 மணியளவில் காத்திருந்த மக்கள் குழுவை குறிவைத்து வெடித்துள்ளது.

    இதுகுறித்து கந்தஹார் மாகாணத்தின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குனர் இனாமுல்லா சமங்கானி கூறுகையில்" தற்கொலைப் படை தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பொதுவாக மக்கள் தங்கள் சம்பளத்தைப் பெறுவதற்காக வங்கியில் கூடுகிறார்கள். அப்போது குண்டு வெடித்துள்ளது. காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்ட நகரின் மருத்துவமனையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார்.

    இதற்கிடையே, தலிபான் அதிகாரிகள் வங்கிக்கு வெளியே உள்ள பகுதியை சுற்றி வளைத்தனர். பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

    இருப்பினும், குண்டுவெடிப்பை அடுத்து ஆம்புலன்ஸ்களில் மயக்கமடைந்தவர்கள் அல்லது இறந்தவர்களின் உடல்கள் ஏற்றப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அப்பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர், அங்கு இரத்தம், உடைகள் மற்றும் காலணிகள் தரையில் சிதறிக்கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • ரஷிய அதிபருக்கான தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்
    • இதன்மூலம் ரஷிய வரலாற்றில் அதிக வருடம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்

    அண்மையில் நடந்து முடிந்த ரஷிய அதிபருக்கான தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் அதிபராக நீடிப்பார்.

    இதன்மூலம் ரஷிய வரலாற்றில் அதிக வருடம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இதற்கு முன்னதாக ஜோசப் ஸ்டாலின் ரஷியாவை அதிக வருடங்கள் ஆண்ட அதிபர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

    மேலும், சோவியத் ரஷியா உடைந்த பிறகு அதிக வாக்குகள் பெற்ற அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    உக்ரைனுக்கு எதிராக இரண்டு வருடங்கள் சண்டை நடைபெற்று வருவது, எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்தது உள்ளிட்ட சம்பவங்கள் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டிய புதின் வெற்றி பெற்றுள்ளார்.

    ரஷியாவில் நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடைபெறவில்லை என அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.

    இந்நிலையில், நடந்து முடிந்த ரஷிய அதிபர் தேர்தலின்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா சிரியத்யேவா, வாக்குச்சீட்டின் பின்புறம் 'போர் வேண்டாம்' என எழுதியுள்ளார்.

    இதனையடுத்து, ரஷ்ய ராணுவத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மாவட்ட நீதிமன்றம், அப்பெண்ணுக்கு 8 நாட்கள் சிறைத் தண்டனையும் 40,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

    • கடலில் ஆய்வு செய்வதாகக் கூறி சீன கப்பல்கள் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
    • சர்வதேச ஆய்வுக்கப்பல்கள் தங்கள் துறைமுகங்களில் நிறுத்த இலங்கை அரசு தடை விதித்தது.

    கொழும்பு:

    சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கடந்த நவம்பர் மாதம் நிலை நிறுத்தப்பட்டது.

    இதற்கு இந்தியா தனது கவலையை இலங்கை அரசிடம் தெரிவித்தது. இதையடுத்து சர்வதேச ஆய்வுக்கப்பல்கள் தங்களது துறைமுகங்களில் நிறுத்த இலங்கை அரசு ஒரு ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டது.

    சமீபத்தில் ஜெர்மனி ஆய்வுக்கப்பலுக்கு மட்டும் இலங்கை அரசு அனுமதி அளித்தது. அதேவேளையில், சீன கப்பலை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு இலங்கை அரசிடம் சீனா தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

    இந்நிலையில், இனி அனைத்து ஆய்வுக்கப்பல்களையும் தங்களது துறைமுகங்களில் நிறுத்த அனுமதிக்க போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் சீன ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளிக்க உள்ளது.

    கடலில் ஆய்வு செய்வதாகக்கூறி சீன கப்பல்கள் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வீடியோவில் பெண் ஒருவர் கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு யோகாசனம் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
    • சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்துள்ளனர்.

    கொள்ளையடிக்க செல்லும் இடத்தில் திருடர்கள் தூங்கியதால் சிக்கிக் கொண்டது, சாமி கும்பிட்டுவிட்டு கைவரிசை காட்டுவது போன்ற சம்பவங்களை கேள்விபட்டிருக்கிறோம்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் பேக்கரி ஒன்றில் திருடுவதற்காக சென்ற இளம்பெண் ஒருவர் கைவரிசை காட்டுவதற்கு முன்பாக பேக்கரி முன்பு யோகாசனம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி உள்ளது. 'மிஷன் இம்பாசிபிள்- கோஸ்ட் புரொடோகால்' ஒலிப்பதிவின் பின்னணி இசையுடன் கூடிய அந்த வீடியோவில் பெண் ஒருவர் கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு யோகாசனம் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    இந்த சம்பவம் கடந்த 3-ந்தேதி நடைபெற்றுள்ளது. யோகாசனம் செய்த பிறகு அந்த பெண் பேக்கரிக்குள் நைசாக நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுள்ளார். இதற்கிடையே சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்துள்ளனர்.



    • உயர்அதிகாரிகள் பணியாற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவாடர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகாரிகள் பணிபுரியும் வளாகத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயங்கரவாதிகளுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். துறைமுகத்தில் துப்பாக்கி சூடு மற்றும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் பல இடங்களில் பதுங்கி கொண்டனர்.

    தகவல் அறிந்ததும் ராணுவத்தினர் துறைமுகத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துறைமுகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 8 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பலுசிஸ்தான் மாகாண முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கூறும்போது, குவாடர் துறைமுக ஆணைய வளாகத்தில் 8 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வன்முறையை பயன்படுத்த விரும்பும் யாரும் அரசின் கருணையை பார்க்க மாட்டார்கள். பாகிஸ்தானுக்காக துணிச்சலுடன் போராடிய அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    இதற்கிடையே தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகளிடம் ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்று உள்ளது. இந்த இயக்கம், பலுசிஸ்தானில் சீனாவின் முதலீடுகளை எதிர்த்து வருகிறது.

    வளங்கள் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தை சீனாவும், பாகிஸ்தானும் சுரண்டுவதாக குற்றம்சாட்டி வருகிறது. அந்த இயக்கத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் செயல்படும் குவாடர் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    • நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.

    துபாய்:

    ரமலான் நோன்பையொட்டி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பள்ளிவாசல்கள், கூடாரங்களில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த நிலையில் உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    இந்த நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர். அவர்கள் நோன்பை திறந்த போது விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது நடந்து கொண்டிருந்தது.


    இது குறித்து துபாய் விமான நிலைய அதிகாரி கூறும்போது, துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான சூழலில் வேலை செய்து வந்தவர்கள் அதனை மறந்து பலரும் விளையாட்டாக பேசிக் கொண்டு மன இறுக்கத்தை மறந்து செயல்பட்டனர்.

    விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

    துபாயில் கின்னஸ் உலக சாதனைகள் பல வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விமான ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

    • இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் அருணாச்சல பிரதேசம் சென்றிருந்தார்.
    • அருணாச்சல பிரதேசம் திபெத்தின் தெற்குப் பகுதி என சீனா சொந்தம் கொண்டாடுகிறது.

    இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் எங்களுடைய நிலப்பரப்பு என சீனா அடிக்கடி உரிமைக்கோரி வருகிறது. இந்திய தலைவர்கள் அருணாச்சால பிரதேசம் சென்றால் சீனா எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

    சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி அருணாச்சல பிரதேசம் சென்றிருந்தார். அதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இந்தியாவால் அருணாச்ச பிரதேசம் என அழைக்குப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். ஜிஜாங்கின் (திபெத்தை சீனா இவ்வாறு அழைக்கிறது. திபெத்தின் தெற்குப்பகுதான் அருணாச்சால பிரதேசம் என சீனா கூறி வருகிறது) தெற்குப் பகுதி சீனாவின் உள்ளார்ந்த பகுதியாகும்" என சீன பாதுகாப்பு அமைச்கத்தின் செய்தி தொடர்பானர் ஜாங் ஜியாவோகாங் தெரிவித்திருந்தார்.

    சீனா இவ்வாறு உரிமைகோரிய நிலையில், அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தி செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறுகையில் "அருணாச்சல பிரதேசத்தை இந்திய நிலப்பரப்பாக அங்கீகரிக்கிறோம்.

    ஊடுருவல் அல்லது அபகரித்தல், ராணுவம் மூலமாக உண்மையான எல்லைக்கோட்டை தாண்டி தங்களது நிலப்பரப்பு என ஒருதலைப்பட்சமாக உரிமைக்கோருவதற்கான எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது" என்றார்.

    • சுரங்கம் தோண்டும் பணியின்போது பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இந்த வெடிவிபத்தில் 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் உள்ள சர்தாலோ என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

    நேற்று இரவு சுமார் 20 தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீத்தேன் வாயுக்கசிவு காரணமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், காயமடைந்தோருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    • ரஷியாவில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அபார வெற்றி பெற்றார்.
    • தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மாஸ்கோ:

    ரஷியாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் அபார வெற்றி பெற்றார். அவர் 88 சதவீத வாக்குகள் பெற்று சாதனை படைத்தார். தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதற்கிடையே தேர்தலுக்கு முன்பாக சிறையில் மரணமடைந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா, அதிபர் புதினுக்கு எதிராக தனது கணவரின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக அறிவித்தார்.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் புதின் பெற்ற வெற்றி தொடர்பாக யூலியா நவல்னயா கூறியதாவது:

    தேர்தல் முடிவுகள் ஒரு பொருட்டல்ல. உலகில் யாரும் புதினை முறையான அதிபராக அங்கீகரிக்கவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம். அவருடன் உலக தலைவர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு மேசையில் உட்கார வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஏனென்றால் அவர் ரஷியாவின் முறையான அதிபர் அல்ல. புதின் எங்கள் அதிபர் அல்ல என்பதை நாங்கள் மற்றவர்களுக்கும் நிரூபித்துள்ளோம். ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் புதின் ஆட்சியை எதிர்த்துப் போராட மக்களை வலியுறுத்துகிறேன்.

    நமக்கு அமைதியான, சுதந்திரமான மற்றும் மகிழ்ச்சியான ரஷியா தேவை. நாம் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் சாதிக்க முடியும். இதை விட்டுக் கொடுத்துவிடக்கூடாது என தெரிவித்தார்.

    • தனி நபர்களின் வாழ்க்கைத் திருப்தி, அத்துடன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு,
    • சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் ஆகிய அடிப்படையில் மதிப்பீடு

    உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இப்பட்டியல் தனி நபர்களின் வாழ்க்கைத் திருப்தி, அத்துடன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் ஆகியவற்றின் சுய மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கையில் பின்லாந்து நாடு தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன.

    10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்பட்டு வரும் அறிக்கையில் முதல் முறையாக, அமெரிக்காவும் ஜெர்மனியும் முதல் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இடம் பெறவில்லை். அந்த நாடுகள் முறையே 23, 24-வது இடத்தில் உள்ளன.

    கனடா, இங்கிலாந்து, கோஸ்டாரிகா, குவைத் ஆகிய நாடுகள் முதல் 20 இடங்களில் உள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுக ளான செர்பியா, பல்கேரியா மற்றும் லாட்வியா ஆகியவை இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    கணக்கெடுக்கப்பட்ட 143 நாடுகளில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. லெபனான் மற்றும் ஜோர்டான் ஆகியவை சரிந்து உள்ளது.

    உலகின் பெரும்பாலான பிராந்தியங்களில் இளைய தலைமுறையினர் தங்களது பழைய தலைமுறையினரை விட மகிழ்ச்சியாக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் இடையே மகிழ்ச்சி அதிக அளவில் குறைந்துள்ளது, அங்கு இளைஞர்களை விட பழைய தலைமுறையினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.

    மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் எல்லா வயதினரிடமும் மகிழ்ச்சி கணிசமாக அதிகரித்தது. ஐரோப்பாவைத் தவிர ஒவ்வொரு பிராந்தியத்திலும் மகிழ்ச்சி சமத்துவமின்மை அதிகரித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×