search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறியதாக இலங்கை அதிபர் மீது முன்னாள் ஐ.ஜி. குற்றச்சாட்டு
    X

    ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறியதாக இலங்கை அதிபர் மீது முன்னாள் ஐ.ஜி. குற்றச்சாட்டு

    உளவுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்தும் ஈஸ்டர் தினத்தன்று 250 உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதலை தடுக்க இலங்கை அதிபர் தவறி விட்டதாக பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் ஐ.ஜி. குற்றம்சாட்டியுள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த பிப்ரவரி மாதம்  ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவ்விவகாரத்தில் ஒழுங்காக கடமையாற்ற தவறியதாக இலங்கை காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ( ஐ.ஜி.) புஜித் ஜெயசுந்தரா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் ஐ.ஜி. புஜித் ஜெயசுந்தரா இலங்கை உச்சநீதி மன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தன்னை பணிநீக்கம் செய்து கட்டாய விடுப்பில் வைத்திருப்பது அநீதியானது என உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த 20 பக்கங்களை கொண்ட மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கையில் இதுபோன்ற மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்திருந்தது. ஆனால், அந்த தகவலை இலங்கை அரசின் உளவுத்துறை தலைவர் நிலாந்தா ஜெயவர்த்தனே அதிபருக்கு நேரடியாக தெரிவிக்கவில்லை.

    தனக்கு கிடைத்த தகவலை போலீசாரிடம் தெரிவித்து உரிய தற்காப்பு நடவடிக்கை எடுக்க தவறியதுடன் காவல் துறையின் தலைவர் என்ற முறையில் நான் தெரிவித்த சில தகவல்களையும் அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

    மேலும், இலங்கை உளவுத்துறைக்கும் ராணுவம் மற்றும் காவல்துறைக்கும் இடையிலான தகவல் தொடர்புகளில் மிகப்பெரிய குறைபாடு இருந்துள்ளது. இதற்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாதான் முக்கிய காரணம்.



    பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டங்களில் அதிபர் கலந்து கொள்ளவில்லை. எனவே, ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய பொறுப்பு அவரையே சேரும் என தனது மனுவில் முன்னாள் ஐ.ஜி. புஜித் ஜெயசுந்தரா சுட்டிக்காட்டியுள்ளார்.

    சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி வந்திருந்த மைத்ரிபாலா சிறிசேனா, ஈஸ்டர் தாக்குதல் பற்றி எனக்கு எந்த உளவுத்தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. அப்படி தெரிந்திருந்தால் அந்த வேளையில் நான் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றிருக்க மாட்டேன் என்று பேட்டியளித்திருந்தது நினைவிருக்கலாம்.
    Next Story
    ×