search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவில் தேர்தல் - விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
    X

    ஆஸ்திரேலியாவில் தேர்தல் - விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

    ஆஸ்திரேலியாவில் நடந்த பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான தொழிற்கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

    தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க 76 இடங்களில் வென்றாக வேண்டும்.

    இந்த தேர்தலில் பருவ நிலை மாற்றம், வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி ஆகியவை முக்கிய பிரச்சினையாக எதிரொலித்தது. அதன் அடிப்படையில் பிரசாரம் செய்யப்பட்டது.

    ஆஸ்திரேலியாவில் ஓட்டு போடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 1 கோடியே 64 லட்சம் பேர் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர். 18 வயது நிறைவு அடைந்தவர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர்.

    ஓட்டு போடாவிட்டால் அவர்களுக்கு 20 ஆஸ்திரேலிய டாலர் (சுமார் ரூ.1,000) அபராதம் விதிக்கப்படும் நடைமுறை உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 95 சதவீத வாக்குகள் பதிவானது நினைவுகூரத்தக்கது.

    தலைநகர் கான்பெர்ரா நேரப்படி காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இங்கு முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையைப் பயன்படுத்தி 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டுபோட்டு விட்டனர்.

    நேற்றும் ஓட்டுப்பதிவு தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடந்தது. பிரதமர் ஸ்காட் மோரிசன், மனைவி ஜென்னியுடன் வந்து சிட்னி நகரில் லில்லி பில்லி பப்ளிக் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுபோட்டார்.

    மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது.

    தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் எதிர்க்கட்சி தலைவர் பில் சார்ட்டன் முந்துகிறார். அவருக்கு 51.5 சதவீதத்தினரின் ஆதரவு கிடைத்துள்ளது. ஆளும் கூட்டணிக்கு 48.5 சதவீத ஆதரவு உள்ளது.

    நாட்டின் கிழக்கு பகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 52 சதவீதத்தினரின் ஆதரவும், ஆளும் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கு 48 சதவீதத்தினரின் ஆதரவும் உள்ளது தெரிய வந்தது.

    நாடு முழுவதும் ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விட்டது. எதிர்க்கட்சி, ஆட்சியைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    Next Story
    ×