search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சனிக்கிழமைகளில் டாக்டராக பணிபுரியும் பூடான் பிரதமர் - சுவாரஸ்ய தகவல்
    X

    சனிக்கிழமைகளில் டாக்டராக பணிபுரியும் பூடான் பிரதமர் - சுவாரஸ்ய தகவல்

    பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வார இறுதியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் குறித்த சுவாரஸ்ய தகவலை பார்ப்போம். #LotayTshering #BhutanPM
    திம்பு:

    ஒரு வீட்டின் தலைவர் பொறுப்பில் இருப்பவர், அன்றாடம் செய்யும் பணிகளில் அடையும் கஷ்டங்கள்,  பணத்தை செலவு செய்யும்முன் சேமிக்க வேண்டும் எனும் முனைப்பு,  குழந்தைகள், உறவினர்கள் என அனைவரும் எந்த வித குறைகளும் சொல்லக்கூடாது என்பதற்காக அவர்கள் செய்யும் தியாகம் இவற்றை தாங்கிக் கொண்டு அன்றாடம் பணிகளை தொடர்கின்றனர்.

    ஒரு வீட்டில் குறிப்பிட்ட அளவு உறுப்பினர்களை கொண்ட ஒரு தலைவர் பொறுப்பு வகித்தாலே இப்படி என்றால், ஒரு நாட்டின் பிரதமர் என்றால் சொல்லவா வேண்டும்?  நாட்டில் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து  ஆராய்வது, நாட்டின் பாதுகாப்பு குறித்த தகவல் அறிவது, மக்களின் கோரிக்கைகள், மாநிலங்களின் வளர்ச்சிக்கான பணிகள் என எண்ணற்ற பணிகளில் ஓய்வின்றி உழைக்கின்றனர் அல்லவா? 



    இப்படிபட்ட பணிகளுக்கு நடுவில், பூடான் நாட்டின்  பிரதமர் லோட்டே ஷெரிங்  சிறிதும் மன கசப்பின்றி வார இறுதியான சனிக்கிழமைகளில் டாக்டராக பணிபுரிகிறார். 41 வயதாகும்  லோட்டே கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி, 7 லட்சத்து 50 ஆயிரம் மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பூடான் நாட்டை ஆளும் இவர், ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராவார். வங்காள தேசம், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் லோட்டே மருத்துவ பயிற்சி பெற்றவர் ஆவார். தான் பயின்ற கல்வியும், பெற்ற பயிற்சியும் மக்களுக்கு உதவும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமைகளில் டாக்டராக பணியாற்றுகிறார்.



    ஜிக்ம் டோரிஜி வாங்ட்ச் தேசிய மருத்துவமனையில்  கடந்த வாரம் ஒரு நோயாளிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளார். அந்த நபர் தற்போது நலமுடன் இருக்கிறார்.  இந்த சேவை குறித்து பிரதமர் லோட்டே கூறுகையில், ‘மருத்துவமனையில் நான் ஒரு டாக்டராக வருகின்ற நோயாளிகளையும், அவர்களது பிரச்சனைகளையும் ஸ்கேன் செய்கிறேன். ஒரு பிரதமராக ஆரோக்கியமான அரசியலையும், அவற்றை மேலும் முன்னேற்றும் வழிமுறைகளையும் ஸ்கேன் செய்கிறேன்.

    என் உயிர் இருக்கும் வரை இந்த பணியை தொடர்வேன். வாரத்தில் 7 நாட்களும் இந்த மகிழ்ச்சி கிடைப்பதில்லை என வருந்துகிறேன். இதனை பணியாகவோ, கடமையாகவோ நினைத்து மட்டும் செய்யவில்லை. என் மன நிம்மதிக்காகவும் செய்து வருகிறேன்’ என கூறினார். #LotayTshering #BhutanPM 
    Next Story
    ×