search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் இந்து பெண் கடத்தல்- லாகூரில் போராட்டம்
    X

    பாகிஸ்தானில் இந்து பெண் கடத்தல்- லாகூரில் போராட்டம்

    பாகிஸ்தானில் 17 வயதுடைய இந்து பெண் கடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து லாகூரில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    லாகூர்:

    பாகிஸ்தானில் இந்து பெண்களை கடத்தி மதம் மாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த மாதம் சிந்து மாகாணம் கோத்கி மாவட்டத்தில் ஹோலி பண்டிகை அன்று 2 இந்து பெண்கள் கடத்தப்பட்டனர்.

    பின்னர் அவர்களுக்கு நடந்த திருமண ஏற்பாடுகள் குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்தியது.

    இந்த நிலையில் மீண்டும் ஒரு 17 வயது இந்து பெண் செல்வாக்கு மிகுந்த நபரால் கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

    இதற்கு கண்டனம் தெரிவித்து லாகூரில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இம்ரான்கான் அரசு இதில் தலையிட்டு அந்த பெண்ணை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். எனவே போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    அதில் “தாகீர் தாம்ரி என்பவர் தனது தந்தை மற்றும் சகோதரர்களின் உதவியுடன் 17 வயது பெண்ணை கராச்சிக்கு கடத்தி சென்று மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணை மீட்டு ஒப்படைக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

    தெற்கு சிந்து மாகாணத்தில் மட்டும் இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த பெண்களை கடத்தி மதம் மாற்றம் செய்து திருமணம் செய்ததாக கடந்த ஆண்டில் 1,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தகவலை பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×