search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருவநிலை மாற்றம்- 80 நாடுகளில் பள்ளி மாணவர்கள் ஸ்டிரைக்
    X

    பருவநிலை மாற்றம்- 80 நாடுகளில் பள்ளி மாணவர்கள் ஸ்டிரைக்

    உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தடுக்க, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சுமார் 80 நாடுகளில், பள்ளி மாணவர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். #ClimateChangeAction #Fridayforfuture #Weschoolstrike
    வாஷிங்டன்:

    உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதலின் காரணமாக குளிர், வெப்பம், மழை என அனைத்து காலக்கட்டங்களும் மாறி,  தற்போது புவி மிகுந்த மோசமான பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், டெல்லி போன்ற முக்கிய பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.

    அமெரிக்காவில் இந்த ஆண்டு துவக்கம் முதலே வரலாறு காணாத பனிப்பொழிவு, பனிச்சரிவிற்கு பலர் பலியாகினர். இவை அனைத்திற்கும் பருவ நிலை மாற்றமே முக்கிய காரணமாக உள்ளது.

    இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தினால் ஏற்பட்டு கொண்டிருக்கும் கடுமையான விளைவுகளை தவிர்க்க, அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, சுமார் 80 நாடுகளில் உள்ள 1000 நகரங்களில் இன்று பள்ளிகளுக்கு செல்வதை தவிர்த்து, போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என மாணவர்களுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவில் கான்பெர்ரா, மெல்போர்ன், சிட்னி ஆகிய பகுதிகளிலும் அமைதியான முறையில் பள்ளி மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த உலகளாவிய ஸ்டிரைக்,  ‘வெள்ளிக்கிழமைகள் வருங்காலத்திற்கான துவக்கம்’ எனும் இணையத்தளத்தின் மூலம் மாணவர்களை ஒருங்கிணைத்துள்ளது.



    இந்த இணையத்தளம்  கிரேட்டா தன்பெர்க்(16) முதன் முறையாக, பருவநிலை மாறுதல்களுக்காக  நடத்திய  போராட்டத்தினைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டதாகும். கிரேட்டா சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி ஆவார்.   இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலை தடுக்க வேண்டி, சுவீடனின் பாராளுமன்ற வாசலில், சிறிய பதாகையுடன் அமைதியான போராட்டத்தில் தனி ஆளாக ஈடுபட்டார். இவர் இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து தற்போது நடந்துக் கொண்டிருக்கும், இந்த ஸ்டிரைக், உலகளவில் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  #ClimateChangeAction #Fridayforfuture #Weschoolstrike
    Next Story
    ×