search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் பஸ் பயணிகள் 13 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்
    X

    ஆப்கானிஸ்தானில் பஸ் பயணிகள் 13 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்

    ஆப்கானிஸ்தானில் பஸ் பயணிகள் 13 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். #Afghanistan #PassengersKidnaped
    காபூல்:

    அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி நடத்திய தாக்குதலில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல்களை தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை அமெரிக்க படையினர் விரட்டியடித்தனர்.

    அதன் பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. ஆனால் சில ஆண்டுகளிலேயே அங்கு தலீபான்கள் மீண்டும் காலூன்ற தொடங்கினர். அங்கு அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து தங்கி இருந்து, பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதில் உள்நாட்டு படைகளுக்கு பக்க பலமாக உள்ளன.

    எனினும் ஆப்கானிஸ்தானில் பல்வேறு நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலீபான் பயங்கரவாதிகளை முழுமையாக ஒடுக்க முடியவில்லை. எனவே தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது.

    தலீபான் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் அதே வேளையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் சம்பவங்களும் தொடர்கின்றன.

    இந்த நிலையில், படாக்சான் மாகாணத்தில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று தலைநகர் காபூல் நோக்கி புறப்பட்டது. பாக்லான் மாகாணத்தில் உள்ள பாக்லான் இ மர்காஷி அருகே சென்றபோது பயங்கரவாதிகள் சிலர் பஸ்சை வழிமறித்தனர்.

    அதன்பிறகு பஸ்சில் ஏறிய பயங்கரவாதிகள் 13 ஆண்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவர்கள் எதற்காக கடத்தப்பட்டனர்? தற்போது அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இந்த கடத்தல் சம்பவத்துக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் பாக்லான் மாகாணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், அவர்கள்தான் பஸ் பயணிகளை கடத்தி இருப்பார்கள் என ராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டினர். #Afghanistan #PassengersKidnaped

    Next Story
    ×