search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐஎஸ் இயக்கத்தில் இணைந்த ஷமீமா பேகம் பிரிட்டன் குடியுரிமையை இழக்கிறார்
    X

    ஐஎஸ் இயக்கத்தில் இணைந்த ஷமீமா பேகம் பிரிட்டன் குடியுரிமையை இழக்கிறார்

    சிரியாவில் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷமீமா பேகத்தின் பிரிட்டன் குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளது. #ISISMillitants #ShamimaBegam #CitizenshipStrip
    லண்டன்:

    லண்டனில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டைவிட்டு வெளியேறினர். மூவரும் சிரியா சென்று ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தனர். ஷமீமா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நெதர்லாந்து நபரை மணந்தார். இவர்களுக்கு  2 குழந்தைகள் பிறந்து, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறந்தன.

    அதன்பின்னர் சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சிலர் சரண் அடைந்தனர். அப்பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதில் ஷமீமா பேகமும் ஒருவர் ஆவார்.

    அங்கு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷமீமா பேகம், தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் எதிர்காலத்திற்காக லண்டன் திரும்ப விரும்புவதாக கூறினார். மீண்டும் நாடு திரும்ப எது வேண்டுமானாலும் செய்யவுள்ளதாகவும், தனது குழந்தையுடன் சேர்ந்து அமைதியான வாழ்வை தொடர ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார்.



    இதற்கிடையே அகதிகள் முகாமில் ‌ஷமீமா பேகத்துக்கு குழந்தை பிறந்ததாக கடந்த பிப்ரவரி 19ம் தேதி அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஷமீமா பேகத்தின் பிரிட்டன் குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக உள்துறை அதிகாரிகளிடம் இருந்து நேற்று ஷமீமாவின் தாயாருக்கு கடிதம் வந்ததாகவும், அதில் ஷமீமா மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டிருந்ததாகவும் செய்தி வெளியானது.

    இந்த தகவல் அறிந்து ஷமீமாவின் குடும்பத்தினர் மிகவும் வருத்தத்துடன் உள்ளதாகவும், இந்த முடிவினை எதிர்த்து சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அவரது குடும்ப வழக்கறிஞர் டஸ்னிம் அகுன்சீ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  #ISISMillitants #ShamimaBegam #CitizenshipStrip
    Next Story
    ×