search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகளாவிய அளவில் புத்தாண்டு தினமான இன்று அதிகமான குழந்தைகள் இந்தியாவில் பிறக்கும்
    X

    உலகளாவிய அளவில் புத்தாண்டு தினமான இன்று அதிகமான குழந்தைகள் இந்தியாவில் பிறக்கும்

    புத்தாண்டு தினமான இன்று மட்டும் இந்தியாவில் சுமார் 70 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மதிப்பிட்டுள்ளது. #childrenborn #Indiachildbirth #Highestnumber #Unicef
    நியூயார்க்:

    உலகளாவிய அளவில் இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 18 சதவீதமாக இருந்து வருகிறது. இந்நிலையில், புத்தாண்டு தினமான ஜனவரி முதல் தேதி இந்தியாவில் சுமார் 70 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மதிப்பிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, 'யூனிசெப்’ எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

    உலகில் நிகழ்ந்த குழந்தை பிறப்புகளில் 90 சதவிகிதம் பிரசவங்கள் அதிகமான வளர்ச்சியடையாத பகுதிகளில்தான் நடந்துள்ளன.

    கடந்த 2016-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, பல்வேறு காரணங்களால் 5 வயதுக்குள் இறந்துவிடும் குழந்தைகள் எண்ணிக்கை 56 லட்சமாக இருந்தது. இவற்றில் ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் பிறந்த முதல் 24 மணிநேரத்துக்குள் சுமார் 2600 குழந்தைகள் உயிரிழந்தன.

    சுமார் 20 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் நாளில் இருந்து ஒருவார காலத்துக்குள் உயிர் நீத்தன. சுமார் 26 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் நாளில் இருந்து ஒருவார காலத்துக்குள் உயிர் நீத்தன.

    இவற்றில் சுமார் 80 சதவீதம் உயிரிழப்புகள் முன்கூட்டிய பிரசவம் மற்றும் பிரசவத்தின்போது ஏற்படும் ரத்தம்சார்ந்த நோய்த்தொற்று, கபவாதம் ஆகிய காரணங்களால் நிகழ்ந்தன. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

    பிறந்த குழந்தைகள் 5 வயதுக்குள் இறந்துப்போவதை தடுக்கும் வகையில் பிரசவகால மரணம் மற்றும் பிறந்தவுடன் மரணம் என்னும் நிலையில் இருந்து அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றும் வகையில் Every Child Alive என்ற பெயரில் உலகளாவிய நிலையில் பிரசார இயக்கத்தை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தீர்மானித்துள்ளது.



    சராசரியாக தினந்தோறும் உலகளாவிய அளவில் நடைபெறும் மகப்பேறில் பாதியளவில் இந்தியா(69,070), சீனா(44,760), நைஜீரியா(20,210), பாகிஸ்தான்(14,910), இந்தோனேசியா(13,370), அமெரிக்கா(11,280), காங்கோ குடியரசு(9,400), எத்தியோப்பியா (9,020), வங்காளதேசம்(8,370) ஆகிய இந்த 9 நாடுகளில் நடக்கின்றன.

    அவ்வகையில், இந்த ஆண்டின் புத்தாண்டு தினமான ஜனவரி முதல் தேதி உலகளாவிய அளவில் சுமார் 3 லட்சத்து 86 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் மட்டும் புத்தாண்டு தினத்தன்று 69 ஆயிரத்து 944 குழந்தைகளும், சீனாவில் 44 ஆயிரத்து 940 குழந்தைகளும், நைஜீரியாவில் 25 ஆயிரத்து 685 குழந்தைகளும் பிறக்கும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வேகத்தில் இருக்கும் குழந்தைகள் பிறப்பு விகிதத்தால்  21-ம் நூற்றாண்டுக்குள் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய நாடாக இந்தியா வளர்ந்துவிடும் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. #childrenborn #Indiachildbirth #Highestnumber #Unicef  
    Next Story
    ×