search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் குழந்தையை ஏமன் தாய் சென்று பார்த்தார்
    X

    அமெரிக்க ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் குழந்தையை ஏமன் தாய் சென்று பார்த்தார்

    பல கட்ட போராட்டத்துக்கு பின்னர் விசா கிடைத்ததையடுத்து ஏமன் பெண், அமெரிக்கா விரைந்தார். அங்கு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் குழந்தையை சென்று பார்த்தார். #YameniMum #DyingSon #California
    வாஷிங்டன்:

    ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் அலி ஹசன், சைமா சுவிலே தம்பதியர். இந்த தம்பதியருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை. அந்தக் குழந்தையின் பெயர் அப்துல்லா.

    ஏமனில் உள்நாட்டுப்போர் நடந்து வருவதால் உயிருக்குப் பயந்து இந்த குடும்பம், எகிப்து நாட்டுக்கு சென்று கெய்ரோ நகரில் குடியேறியது.

    இந்த நிலையில், குழந்தைக்கு ‘ஹைப்போமைலினேசன்’ என்ற மூளை நோய் தாக்கி இருப்பது தெரியவந்தது. இந்த நோய் தாக்கியதால் குழந்தை சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.



    குழந்தையை சிகிச்சைக்காக தந்தை அலி ஹசன், 3 மாதங் களுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்றார். அவர்கள் இருவருக்கும் அமெரிக்க குடியுரிமை இருந்தது. ஆனால் அலி ஹசன் மனைவி சைமாவுக்கு ஏமன் நாட்டு குடியுரிமைதான் உள்ளது.

    ஏமன், ஈரான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு ஜனாதிபதி டிரம்ப் தடை விதித்துள்ளார். அதை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.

    இதனால் ஏமன் குடியுரிமை கொண்ட சைமாவுக்கு அமெரிக்க விசா கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் கணவனுடனும், குழந்தையுடனும் போக முடியவில்லை.

    அமெரிக்காவில் ஓக்லாண்டில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான்பிரான்சிஸ்கோ பெனிஆப் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் நிலைமை கவலைக்கிடமானது. உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி தெரியவந்தபோது, குழந்தையின் தாய் சைமா அழுது புரண்டார். உயிர் பிரிவதற்கு முன்னர் தன் குழந்தையைப் பார்த்துவிட வேண்டும், உயிர் போவதற்குள் குழந்தைக்கு அன்பு முத்தம் தர வேண்டும் என்று தவித்தார். ஆனால் அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டது.

    இருந்தாலும், அவருக்கு அமெரிக்கா விசா வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. டுவிட்டரில் ஏராளமானோர் பதிவிட்டனர். அமெரிக்க அதிகாரிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் மின்னஞ்சல் கடிதம் அனுப்பினர். அமெரிக்க எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்தனர்.

    ஜனாதிபதி டிரம்புக்கு அலி ஹசன் எல்லா விவரங்களையும் சொல்லி, தன் மனைவி சைமாவுக்கு விசா வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    கடைசியில் ஒரு வழியாக சைமாவுக்கு அமெரிக்கா ‘ஐ-130’ விசா வழங்கியது. இந்த விசா, அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களின் நெருங்கிய உறவினர்கள் அங்கு செல்வதற்கு அனுமதி அளிக்கிறது.

    அதைத்தொடர்ந்து சைமா, கெய்ரோ நகரில் இருந்து நேற்று முன்தினம் இரவு சான்பிரான்சிஸ்கோ சென்று இறங்கினார். பின்னர் அங்கிருந்து 22 மைல் தொலைவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அங்கு மரணத்தின் விளிம்பில், உயிருக்கு போராடி வருகிற குழந்தை அப்துல்லாவை அவர் பார்த்தார். கணவரையும் சந்தித்தார். அப்போது அந்தத் தாயின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. இது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது. #YameniMum #DyingSon #California 
    Next Story
    ×