search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
    X

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்தியவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க படை வீரர்கள் முயற்சித்தபோது அவர் தப்பினார். #France #ChristmasMarket #Shooting
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அங்குள்ள ஸ்டிராஸ்பர்க் நகர கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்று முன்தினம் மாலையில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.

    இரவு 8 மணி அளவில் அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மர்ம நபர், மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் பதறியடித்தவாறு ஓட்டம் எடுத்தனர்.



    இருப்பினும் துப்பாக்கிச்சூட்டில் குண்டு பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் அங்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூட்டை தடுத்து நிறுத்த அவர்கள் முயற்சித்தனர். ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், அவர்கள் சொல் கேட்டு துப்பாக்கிச்சூட்டை நிறுத்துவதாக இல்லை.

    ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் அவர் காயம் அடைந்தாலும், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை சுட்டும், பிடிக்க முடியாமல் போனது படை வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    துப்பாக்கிச்சூடு பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், கண்காணிக்கப்பட்டு வந்த சந்தேக நபர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர், 29 வயதான அவரது பெயர் ஷெரீப் என தகவல்கள் கூறுகின்றன.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர். பல உணவு விடுதிகளிலும், ‘பார்’களிலும் கதவுகளை இழுத்து மூடினர். அங்கிருந்த மக்கள் அங்கேயே அடைக்கலம் தேடினர்.

    இதற்கிடையே தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய நபர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து, அங்கு படையினர் சென்று சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, அந்த நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம் மூடப்பட்டது. தாக்குதலில் பலியானவர்களுக்கு சபாநாயகர் ஆன்டனியோ தஜானி இரங்கல் தெரிவித்தார்.

    அந்த நாட்டின் அதிபர் மெக்ரான் மந்திரிசபை அதிகாரிகளைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்ட மெக்ரான், நடந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார். நாட்டு மக்களுடன் இணைந்து நிற்பதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தாக்குதல் நடத்திய நபரை தேடிப்பிடித்து கைது செய்வதற்காக அந்த நகரில் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 2 ஹெலிகாப்டர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. #France #ChristmasMarket #Shooting 
    Next Story
    ×