search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் - கொட்டும் மழையில் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்கள் அஞ்சலி
    X

    முதல் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் - கொட்டும் மழையில் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்கள் அஞ்சலி

    நான்காண்டுகளில் 2 கோடி உயிர்களை பறித்த முதல் உலகப் போர் முடிந்த நூற்றாண்டு நினைவுநாளான இன்று சுமார் 70 நாடுகளின் தலைவர்கள் பாரிஸ் நகரில் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். #Worldleadersmark #WWIcentenary #Parisceremony
    பாரிஸ்: 

    முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

    கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு மவுன ஊர்வலமாக தலைவர்கள் நடந்துவந்து போர்  நினைவு சின்னத்தின் அருகே திரண்டனர். 

    பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மாக்ரான் தலைமையில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய பிரதமர் விளாடிமிர் புதின், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், கனடா பிரதமர் ஜஸ்ட்டின் டுருடேயு உள்ளிட்ட தலைவர்கள் ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர்.

    பாதுகாப்பு காரணமாக டிரம்ப், புதின் ஆகியோர் நடந்து வராமல் கார் மூலம் நினைவு சின்னத்தை வந்தடைந்தனர். நினைவு சின்னத்தில் டிரம்ப்பும் புதினும் கைகுலுக்கி கொண்டனர்.

    சரியாக காலை 11 மணி அடித்ததும் முதல் உலகப் போரில் தங்களது இன்னுயிரை நீத்த கோடிக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தலைவர்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட பல்லாயிரம் பேரும் இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பின்னர், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மாக்ரான் உருக்கமாக உரையாற்றினார்.

    உலகில் பல நாடுகள் இன்று தேசியவாதம் என்ற மனப்போக்கை கடைபிடித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தேசப்பற்று அல்லது தேசபக்தி என்பது வேறு. தேசியவாதம் என்பது வேறு. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

    அமைதிக்கான நமது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் வரலாறு நம்மை சில வேளைகளில் அச்சுறுத்தி வருகின்றது. தற்போது பழைய தீமைகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. 

    முதல் உலகப் போர் விட்டுச்சென்ற தடங்கள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்து இன்னும் அழிந்தபாடாக இல்லை. 

    பருவநிலை மாற்றம், வறுமை, பஞ்சம் மற்றும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போரிடுவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். அனைத்துக்கும் மேலாக அமைதிக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் மாக்ரான் வலியுறுத்தினார். #Worldleadersmark #WWIcentenary #Parisceremony
    Next Story
    ×