search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே கட்சியின் 2 எம்பிக்கள் கைது
    X

    இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே கட்சியின் 2 எம்பிக்கள் கைது

    இலங்கையில் ஓய்வு பெற்ற மேஜரை தாக்கிய வழக்கில் ரணில் விக்ரமசிங்கே கட்சியைச் சேர்ந்த 2 எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். #SriLanka #SriLankaMPsArrested
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரம சிங்கேவை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் நீக்கிவிட்டு, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பங்களும் சர்ச்சைகளும் நீடிக்கின்றன. ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபரின் திடீர் முடிவுக்கு ரணில் விக்கிரம சிங்கே மற்றும் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாராளுமன்றத்தை கூட்டி ராஜபக்சேவின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் தொடர்ந்த வலியுறுத்தி வருகிறார்.

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கை பாராளுமன்றம் 14-ம் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா அறிவித்தார். அப்போது ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

    இதற்கிடையே ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னா மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில், ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி எம்பிக்கள் ஹேசன் விதானகே மற்றும் பலித தேவரப்பெருமா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    அவர்கள் இருவரும் இன்று கொலுபிட்டியா காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து 2 எம்பிக்களையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் துறைமுக மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 

    ராஜபக்சே புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டதையடுத்து பாராளுமன்றம் கூடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், எம்பிக்கள் கைது செய்யப்பட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SriLanka #SriLankaMPsArrested
    Next Story
    ×