search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துடைப்பத்துடன் களமிறங்கிய இம்ரான் கான் - தூய்மை பாகிஸ்தான் திட்டத்தை தொடங்கி வைத்தார்
    X

    துடைப்பத்துடன் களமிறங்கிய இம்ரான் கான் - தூய்மை பாகிஸ்தான் திட்டத்தை தொடங்கி வைத்தார்

    பிரதமர் மோடி பாணியில் கல்லூரி ஒன்றில் கையில் துடைப்பத்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று தூய்மை பாகிஸ்தான் திட்டத்தை தொடங்கி வைத்தார். #ImranKhan #CleanPakistan
    இஸ்லாமாபாத்:

    ‘சுவாச் பாரத்’ என்ற பெயரில் நமது நாட்டில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்துக்கான பிரசார தூதவர்களாக விளையாட்டு மற்றும் கலைத்துறையை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களை அவர் இணைத்துள்ளார்.

    அதேவகையில், பாகிஸ்தானிலும்  தூய்மையான பாகிஸ்தான் மற்றும் பசுமையான பாகிஸ்தான் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் பாராளுமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.



    அதன்படி, பாகிஸ்தான் நாட்டிலுள்ள 4 மாகாணங்களை சேர்ந்த முக்கிய பெருநகரங்களில் பிரதமர் இம்ரான் கான் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

    இஸ்லாமாபாத் நகரில் உள்ள கல்லூரி வளாகத்தை துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்த இம்ரான் கான், அங்கு மரக்கன்று ஒன்றையும் நட்டார்.

    முன்னதாக, இந்த ஐந்தாண்டுகால திட்டம் தொடர்பாக விளக்கிப்பேசிய இம்ரான் கான், இஸ்லாமாபாத் நகரில் உள்ள குடிசைப்பகுதிகள் குப்பைமேடாக மாறிப்போனதாகவும், நீரூற்றுகள் அனைத்தும் சாக்கடைகளாகி விட்டதாகவும் குறிப்பிட்டார்.



    இந்த நிலையை மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுகூடி உறுதியேற்க வேண்டும். அடுத்த தலைமுறையினரிடம் தூய்மையான பாகிஸ்தானை நாம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இம்ரான் கான் கேட்டுக் கொண்டார்.

    இந்த திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என பாகிஸ்தான் வானொலி தெரிவித்துள்ளது.  #ImranKhan #CleanlinessDrive #ImranKhanlaunches #CleanPakistan
    Next Story
    ×