search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்களிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் - ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி
    X

    எங்களிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் - ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி

    ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடரும் என ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜாரிப் தெரிவித்துள்ளார். #MohammadJavadZarif #SushmaSwaraj #UNGA
    நியூயார்க் :

    ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா அந்நாட்டிடம் இருந்து யாரும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என உத்தரவிட்டது. மீறி இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

    ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கை காரணமாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அளவை குறைக்க இந்தியா திட்டமிட்டது. அதேசமயம் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

    கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக அமெரிக்க அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார். ஒருவேளை அதற்கு ஒப்புதல் கிடைத்தாலும் அந்த விலக்கு குறைந்த காலத்துக்கு தான் வழங்கப்படும் என மைக் பாம்பியோ கூறினார்.

    ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதன்பின் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்பது அமெரிக்காவின் உத்தரவு.

    இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின் போது இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜாரிப் இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய முகமது ஜாவத், ஈரானிடம் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடரும் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ எங்கள் இந்திய நண்பர்கள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி போன்றவற்றை நோக்கத்தின் அடிப்படையில் செய்பவர்கள். இதே கருத்தைத் தான் சுஷ்மா சுவராஜூம் என்னிடம் தெரிவித்தார். நாங்கள் இந்தியாவுடன் விரிவான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.

    இந்த ஒத்துழைப்பு எரிசக்தி துறையிலும் தொடர்கிறது. ஏனென்றால், இந்தியாவின் நம்பகமான எரிசக்தி வினியோகஸ்தராக ஈரான் எப்பொழுதும் இருந்து வருகிறது. எனவே, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா தொடரும்’ என அவர் தெரிவித்தார்.

    ஈரானிடன் இருந்து சீனாவுக்கு அடுத்ததாக அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடு இந்தியாவாகும், அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பிறகு ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவை இந்தியா  குறைத்துள்ளதே தவிற முற்றிலும் நிறுத்திவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #MohammadJavadZarif #SushmaSwaraj #UNGA
    Next Story
    ×