search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - படைவீரர்கள் 2 பேர் பலி
    X

    பாகிஸ்தானில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - படைவீரர்கள் 2 பேர் பலி

    பாகிஸ்தானில் நடந்த பயங்கர மோதலின்போது, 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். படைவீரர்கள் 2 பேரும் பலியாகினர். #Pakistan #TerroristKilled #KalatOperation
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது. அங்கு லஷ்கர் இ தொய்பா, ஹக்கானி நெட்வொர்க் அமைப்பினர், தலீபான் இயக்கத்தினர், ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.

    பாகிஸ்தானை சொர்க்கபுரியாக கருதி இந்த பயங்கரவாதிகள் அங்கு தங்கி பயங்கரவாத சதித்திட்டங்கள் தீட்டி, எல்லை தாண்டிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்ற புகாரை அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.



    இந்த நிலையில் அங்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் கலாத் என்ற இடத்தில் மங்கோசார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் அந்த மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

    இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அவர்களைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் தங்களது துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர்.

    ஆனால் அவர்களை சரண் அடையுமாறு பாதுகாப்பு படையினர் கூறியும் அவர்கள் அதைக் கேட்காமல் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர்.

    இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் இடைவிடாமல் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சண்டையின்போது 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதே போன்று பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேரும் பலியாகினர். அவர்களில் முகமது வாரிஸ், ஷாபான் ஜாங் பகுதியை சேர்ந்தவர் என்றும், மிர் ஆலம் ஜில்கித், பல்திதானை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

    பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ ஊடகப்பிரிவு ஐ.எஸ்.பி.ஆர். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாத செயல்கள் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சிலர் சதி செய்து வருவதாக உளவுத்தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில், அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். படையினர் 2 பேர் பலியாகினர். அங்கிருந்து 2 கவச உடைகள், ஏராளமான வெடிபொருட்கள், பிற ஆயுதங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பலியான பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து எந்தத் தரப்பிலும் தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  #Pakistan #TerroristKilled #KalatOperation
    Next Story
    ×