search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலிப்பைன்சை தாக்கியது மங்குட் புயல்- பலத்த காற்றுடன் கனமழை
    X

    பிலிப்பைன்சை தாக்கியது மங்குட் புயல்- பலத்த காற்றுடன் கனமழை

    பிலிப்பைன்சில் மங்குட் புயல் தாக்கியதையடுத்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. #Mangkhut
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மங்குட்’ என்ற புயல் இன்று கடுமையாக தாக்கியது. இது இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த புயல் என கருதப்படுகிறது. புயல் காரணமாக பிலிப்பைன்சின் வடக்கு கடற்கரை பகுதியில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.  மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. மின்சாரம் தடைபட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    காற்று கடுமையாக வீசுவதால் சேதம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ‘மங்குட்’ புயல் 4-வது ரகம் என கணிக்கப்பட்டுள்ளது. இது ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்களில் கடும் சேதத்தை விளைவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் ‘கையான்’ என்ற சூப்பர் புயல் பிலிப்பைன்சை தாக்கியது. அதில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.


    இதேபோன்று இந்த ‘மங்குட்’ புயலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இப்புயலினால் 40 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இங்கு ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

    ‘மங்குட்’ புயல் பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது. அது இன்று மாலை ஹாங்காங் பகுதியில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Mangkhut
    Next Story
    ×