search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா - கரோலினாவை தாக்கிய புளோரன்ஸ் புயலில் சிக்கி 5 பேர் பலி
    X

    அமெரிக்கா - கரோலினாவை தாக்கிய புளோரன்ஸ் புயலில் சிக்கி 5 பேர் பலி

    அமெரிக்காவின் கடலோர பகுதியான கரோலினா நகரை புளோரன்ஸ் புயல் தாக்கியதில் தாய், குழந்தை உள்பட் 5 பேர் பலியாகினர். #HurricaneFlorence
    வாஷிங்டன்:

    அட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான ‘புளோரன்ஸ்’ என பெயரிடப்பட்ட புயல் நேற்று கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது.

    வடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் நேற்று காலை புயல் கரையை கடந்தது. அதனால் பலத்த மழை கொட்டியது. மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

    கடும் மழை பெய்ததால், வடக்கு கரோலினா பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள 2 ஆறுகளின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் ரோடுகளில் 10 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கியது. தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன.

    அதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வடக்கு கரோலினா நகரம், அதை சுற்றியுள்ள பகுதிகளும் இருளில் மூழ்கின. அங்குள்ள தனியார் டெலிவி‌ஷன் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.


    புயல் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியாகிவிட்டனர். வில்மிங்டனில் ஒரு பெண் தனது குழந்தையுடன் பலியானார். இவர்களது வீட்டின் மீது மரம் விழுந்தது. அதில் அவர்கள் பலியாகினர். இறந்த பெண்ணின் கணவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் லெனாயிர் கவுன்டி பகுதியில் 70 வயது முதியவர் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மின்சாரம் தாக்கியும், மற்றொருவர் வீட்டின் வெளியே காற்றில் சிக்கி தவித்த தனது செல்ல நாயை காப்பாற்ற முயன்றபோதும் பலியாகினர். ஹாம்ஸ்டட் நகரில் ஒரு பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். வீட்டின் அருகே மரம் விழுந்து கிடந்ததால் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி கொண்டு செல்ல முடியவில்லை.

    இதற்கிடையே புயல் தாக்கிய வடக்கு கரோலினாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி அவசர உதவி மையங்களில் தங்கியுள்ளனர். ஜேக்சான் வில்லேவில் இரவில் ஓட்டல் மீது மரம் விழுந்தது. அங்கு தங்கியிருந்த 60 பேர் மீட்கப்பட்டனர்.

    நியூபெர்ன் மற்றும் வடக்கு கரோலினாவில் வீடுகளுக்குள் 10 அடி உயரத்துக்கு தண்ணீர் புகுந்தது. அங்கு தவித்துக் கொண்டிருந்த 30 ஆயிரம் பேர் பத்திரமாகமீட்டு வெளியேற்றப்பட்டனர். வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து 17 லட்சம் பேர் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 8 லட்சம் பேர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர். நிலைமை சீராகி மின் வினியோகம் கிடைக்க இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே புளோரென்ஸ் புயல் தெற்கு கரோலினாவுக்குள் ஊடுருவியிருப்பதாக வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பலத்த மழை பெய்யும். இதன்மூலம் 18 லட்சம் கோடி காலன்கள் மழைநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புயல் பாதித்த வடக்கு கரோலினாவுக்கு அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. #HurricaneFlorence
    Next Story
    ×