search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதவாதிகளிடம் பணிவதா? இம்ரான் கானின் பொருளாதார குழுவில் இருந்து நிபுணர் விலகல்
    X

    மதவாதிகளிடம் பணிவதா? இம்ரான் கானின் பொருளாதார குழுவில் இருந்து நிபுணர் விலகல்

    மதவாத அமைப்புகள் எதிர்ப்பினால் அகமதியா பிரிவை சேர்ந்த இளைஞர் பாகிஸ்தானின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிபுணர் குழுவில் இருந்து மேலும் ஒருவர் விலகியுள்ளார். #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த மாதம் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், சரிந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, 18 பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.

    அந்தக் குழுவில், சிறுபான்மை அகமதிய பிரிவைச் சேர்ந்த அதீப் மியானின் பெயர் இடம் பெற்றிருந்தது. அமெரிக்காவில் பட்டம் பெற்று, சர்வதேச நிதியத்தால் உலகின் தலைசிறந்த 25 இளம் பொருளாதார நிபுணர்களில் ஒருவர் என்று அறிவிக்கப்பட்ட அதீப் மியான் அகமதியர் பிரிவைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அவரை பொருளாதார ஆலோசனைக் குழுவில் சேர்த்ததற்கு இஸ்லாமிய மதவாத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    பாகிஸ்தானில் அகமதியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்ளப்படாததுடன், அவர்களது மத நம்பிக்கைகள் இஸ்லாமுக்கு எதிராகக் கருதப்படும் நிலையில், மத அமைப்புகள் எதிர்ப்பின் காரணமாக அவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். 

    அரசின் இந்த முடிவு, மதவாதிகளின் நெருக்கடிக்கு இம்ரான் கான் தலைமையிலான அரசு அடிபணிந்ததைக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், அதீப் மியான் நீக்கத்தை கண்டித்து பொருளாதார குழுவில் இடம் பெற்றிருந்த, இம்ரான் ரஸல் ராஜினாமா செய்துள்ளார்.

    ‘பாகிஸ்தானில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்து, அகமதியா பிரிவைச் சேர்ந்த அதீப் மியான் நீக்கப்பட்டதற்கான காரணம் ஏற்கும்படியாக இல்லை. மத நம்பிக்கைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது, எனது கொள்கைக்கு எதிரானது.  எனவே, பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்து கனத்த மனதுடன் விலகுகிறேன்’ என்று தனது ட்விட்டரில் இம்ரான் ரஸல் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×