search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவில் முக்கிய நகரை மீட்க ராணுவம் முற்றுகை - 7 லட்சம் பேர் போர்முனையில் சிக்கி தவிப்பு
    X

    சிரியாவில் முக்கிய நகரை மீட்க ராணுவம் முற்றுகை - 7 லட்சம் பேர் போர்முனையில் சிக்கி தவிப்பு

    சிரியாவில் புரட்சி படையினரிடம் உள்ள இத்லிப் நகரை கைப்பற்றுவதற்காக அந்நாட்டு ராணுவ படைகள் பீரங்கி வாகனங்களுடன் தாக்குதல் நடத்த தயாராகி இருப்பதால் நகரில் உள்ள 7 லட்சம் மக்கள் அச்சத்தில் உள்ளனர். #Syria
    டமாஸ்கஸ்:

    அரபு நாடான சிரியாவில் 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் ப‌ஷர் அல் ஆசாத்தை தூக்கி எறிய அமெரிக்க ஆதரவு புரட்சி படைகள் ஒரு பக்கம் போரிட்டு வருகின்றன. இவை தவிர குர்திஸ் படைகள், துருக்கி ஆதரவு புரட்சி படை ஆகியவையும் போரிடுகின்றன.

    நாட்டின் பல பகுதிகள் புரட்சி படைகளின் கைவசம் உள்ளது. குறுகிய இடங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளிட்ட அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

    புரட்சி படை மற்றும் தீவிரவாதிகளிடம் இருக்கும் இடங்களை மீட்பதற்கு சிரிய ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது. அவர்களுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் உதவி வருகின்றன. ரஷியா நேரடியாகவே வான் தாக்குதலை நடத்தி வருகிறது.

    ஏற்கனவே புரட்சி படையினரிடம் இருந்த கிழக்கு அலப்போ, கிழக்கு கூடா, தாரா ஆகிய பகுதிகளை ரஷிய படைகள் உதவியுடன் சிரியா மீட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சண்டைக்கு இடையே குண்டுவீச்சில் சிக்கி பலியானார்கள்.

    சிரியாவில் இத்லிப் என்ற பெரிய நகரம் உள்ளது. இதுவும் தற்போது புரட்சி படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. துருக்கியின் எல்லையில் உள்ள இந்த நகரை மீட்பதற்காக சிரியா படைகள் நகரை முற்றுகையிட்டுள்ளன.

    ஏராளமான கவச வாகனங்களும், பீரங்கி வாகனங்களும் தொடர்ந்து நகரை நோக்கி முன்னேறி வருகின்றன. எந்த நேரத்திலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று ஆங்காங்கே விமானம் மூலமும், பீரங்கி மூலமும் குண்டு வீசப்பட்டது. ரஷிய விமானங்களும் தாக்குதல் நடத்தின. இதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 5 பேர ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் என்பது தெரிய வந்தது. 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.



    இந்த நகரில் தற்போது 7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 2½ லட்சம் பேர் அந்த நகரை சொந்த ஊராக கொண்டவர்கள். மற்றவர்கள் வேறு இடங்களில் போருக்கு பயந்து தப்பி வந்தவர்கள். இங்கும் இப்போது சண்டை தொடங்கி இருப்பதால் 7 லட்சம் மக்களும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தாக்குதல் தீவிரமானால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாக கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே, 7 லட்சம் பேரையும் பத்திரமாக வெளியேற்ற வேண்டும் என்று ஐ.நா. சபை சிரியா அரசை கேட்டு கொண்டுள்ளது.

    ஏற்கனவே புரட்சி படைகளிடம் இருந்த நகரங்களை மீட்ட போது, சிரியாவும், ரஷியாவும் கண்மூடித்தனமாக விமான தாக்குதல் நடத்தின. இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

    அதேபோன்ற நிலை இந்த நகரிலும் நடைபெறலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இத்லிப் நகரில் தாக்குதலை நடத்தக்கூடாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அங்கு தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய மனித படுகொலையாக அமையும். அதை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்து இருக்கிறது. #Syria
    Next Story
    ×