search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியான்மரில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிருபர்களுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆதரவு
    X

    மியான்மரில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிருபர்களுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆதரவு

    மியான்மர் நாட்டில் தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இரு நிருபர்களுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். #MikePence
    வாஷிங்டன் :

    மியான்மர் நாட்டின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் மீது கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவத்தினரின் உச்சகட்ட தாக்குதலில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின.

    உயிருக்கு பயந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்றனர். மியான்மரில் இருந்தபோது ரோஹிங்கியா இனப் பெண்களை ராணுவத்தினர் கொடூரமான முறையில் கற்பழித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையில், மியான்மர் நாட்டின் பாதுகாப்புக்குரிய ரகசியத்தை திருடியதாக ரய்ட்டர்ஸ் என்னும் பிரபல செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரு நிருபர்களை கடந்த டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்.

    ரக்கினே மாநிலத்துக்குட்பட்ட இன்டின் என்னும் கிராமத்தில் சட்டமீறலாக பத்து பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது, தங்களை ஓட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்த போலீசார் சில ஆவணங்களை தங்களிடம் தந்ததாகவும், ஓட்டலை விட்டு வெளியே வந்ததும் நாட்டின் ரகசியத்தை திருடியதாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் கைதான நிருபர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கைதான நிருபர்கள் மீதான தேசத்துரோக வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி யாங்கூன் நகர நீதிபதி யே ல்வின், குற்றம்சாட்டப்பட்டிள்ள வா லோனே(32), கியாவ் சொய் ஊ(28) ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

    இந்த தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக்குரல் வலுத்துவரும் நிலையில் அவர்களை விடுதலை செய்யக்கோரி மியான்மர் நாட்டின் பல பகுதிகளில் மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், ஐக்கிய நாடுகள் சபையும் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியுள்ளது.



    இந்நிலையில், அமெரிக்கா துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், மியான்மர் அரசு கைது செய்யப்பட்ட நிருபர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

    இது குறித்து ட்விட்டரில் மைக் பென்ஸ் பதிவிட்டுள்ளதாவது :-

    ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகளை வெளிக்கொண்டு வந்த வா லோனே, கியாவ் சொய் ஊ ஆகிய இருவரையும் பாராட்ட வேண்டும். இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைகளை வெளியிடுவது அவர்களின் வேலை, இதற்காக அவர்களை சிறையில் அடைத்திருக்க கூடாது.

    ஜனநாயகத்தை வலிமைப்படுத்த மதம் மற்றும் ஊடக சுதந்திரம் அவசியமாகும். எனவே, மியான்மர் அரசு அவர்களுக்கு எதிராக பிறப்பித்த கைது உத்தரவை திரும்பப்பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். #MikePence
    Next Story
    ×