search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெலிகாப்டர் விசிறியால் தலை துண்டிக்கப்பட்டு மானசரோவர் யாத்திரை சென்ற இந்தியர் பலி
    X

    ஹெலிகாப்டர் விசிறியால் தலை துண்டிக்கப்பட்டு மானசரோவர் யாத்திரை சென்ற இந்தியர் பலி

    நேபாளம் நாட்டில் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற இந்திய பக்தர் இன்று ஹெலிகாப்டர் விசிறியால் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காத்மாண்டு:

    திபெத் நாட்டில் உள்ள மானசரோவர் ஏரி கடல் மட்டத்திலிருந்து 4590 மீட்டர் உயரத்தில் கைலாய மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி ஆகும்.

    இந்து மதத்தின்படி மானசரோவர் ஏரி பரிசுத்தம் அல்லது தூய்மைக்கு உருவகப்படுத்தப்படுகிறது. இந்த ஏரியின் நீரைப் பருகுபவர் இறப்பிற்குப் பின் சிவபெருமானைச் சென்றடைவர் என்றும், அவர் 100 ஜென்மத்தில் செய்த பாவத்தைப் போக்குவர் என்றும் நம்பப்படுகிறது.

    கைலாய மலையைப் போலவே, மானசரோவர் ஏரியும் புனிதத் தலமாக கருதப்படுகிறது. இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து மக்கள் இவ்விடத்திற்கு வருகின்றனர்.

    இந்த ஏரியில் நீராடினாலும், இதன் நீரைப் பருகினாலும் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. ஏரியைச் சுற்றிப் பார்க்க இந்தியாவில் இருந்து புனிதப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பயணம் 'கைலாச - மானசரோவர் யாத்திரை' என்றும் அழைக்கப்படுகிறது. இந்து, புத்தம் மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த யாத்ரீகர்களும் இப்பயணத்தின் போது இந்த ஏரியில் புனித நீராடி மகிழ்கின்றனர்.


    இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை தொடங்கப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான யாத்திரையை சிக்கிம் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.சி. குப்தா கடந்த ஜூம் மாதம் 15-ம் தேதி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து லிபுலே கணவாய் வழியாகவும், சிக்கிமிலிருந்து நாது லா மாங்த்தி பகுதியில் இருந்து புறப்பட்ட 57 பக்தர்கள் கொண்ட முதல் யாத்ரீகர்கள் குழு, மலைவழியாக நடந்து வந்து கஞ்சி பகுதியில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 17,500 அடி உயரமுள்ள லிப்புலேக் கணவாய் வழியாக கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி மானசரோவர் புறப்பட்டு சென்றது.

    இதை தொடர்ந்து கடந்த ஒன்றரை மாதமாக பல்லாயிரம் பக்தர்கள் இந்தியாவில் இருந்து மானசரோவர் யாத்திரைக்கு சென்றவண்ணம் உள்ளனர். இங்குள்ள ஹில்ஸா மற்றும் சிம்கோட் பகுதிகளுக்கு இடையில் சாலை வசதிகள் இல்லாததால் சிறிய ஹெலிகாப்டர்களில் சென்று இந்த புனித நதியில் நீராடுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சில யாத்ரீகர்களுடன் இன்று ஹில்ஸா பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அதில் இருந்து கீழே இறங்கிய யாத்ரீகர்களில் ஒருவர் முன்னோக்கி நடந்து செல்வதற்கு பதிலாக பின்னால் நடந்து சென்றார்.

    அப்போது அந்த ஹெலிகாப்டரின் வால் பகுதியில் சுழன்று கொண்டிருந்த விசிறியில் சிக்கிய அவரது தலை துண்டாகிப் போனதால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் உயிரிழந்தார்.

    உயிரிழந்த பக்தர் மும்பையை சேர்ந்த நாகேந்திர குமார் கார்த்திக் மேத்தா(42) என தெரியவந்துள்ள நிலையில், அவரது பிரேதத்தை சிம்கோட் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நேபாளம் போலீசார், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Mansoravar #Mansoravarpilgrims #Mansoravarpilgrimbeheaded
    Next Story
    ×