search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் விமானத்தை திருடி ஓட்டிச் சென்ற ஊழியர் விபத்தில் பலி
    X

    அமெரிக்காவில் விமானத்தை திருடி ஓட்டிச் சென்ற ஊழியர் விபத்தில் பலி

    அமெரிக்காவில் விமான ஊழியர் ஒருவர் பயணிகள் விமானத்தை திருடி ஓட்டிச் சென்று, விபத்தில் சிக்கி பலி ஆனார். இது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Stolenplanecrashes #SeattleAirport
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், சியாட்டில் நகர சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் பங்குதாரராக உள்ள ஹாரிஸன் பயணிகள் விமானம் (ஹாரிஸன் ஏர் கியூ-400) நின்று கொண்டு இருந்தது.

    அந்த விமானத்தின் பழுதுகளை சரி செய்யும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டு இருந்தார்.

    ஆனால் திடீரென அந்த விமானத்தை அவர் திருடி, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓட்டிச் சென்றார். ஊழியர், விமானத்தை ஓட்டிச் சென்றது அந்த விமான நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    இது குறித்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து அந்த விமானத்தை இரண்டு ‘எப்-15’ போர் விமானங்கள் பின்னாலே துரத்திச் சென்றன. ஆனால் அந்த விமானம், கெட்ரான் தீவில் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற ஊழியர் பலி ஆனார்.

    அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து சியாட்டில் விமான நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த விமான நிலையம் வழக்கம் போல இயங்க தொடங்கி விட்டது.


    திருடிய விமானத்தை ஊழியர் வானில் ஓட்டிச் சென்றதையும், விமான நிலையத்தை மூடியதால் பயணிகள் முனைய ஓய்வறையில் காத்திருந்ததையும் படத்தில் காணலாம்



    இதுபற்றி விமான நிலையம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து ஒரு ஊழியர், பயணிகள் யாரும் இல்லாத விமானத்தை உரிய அங்கீகாரம் இன்றி எடுத்துச் சென்று விட்டார். அந்த விமானம், விபத்துக்கு உள்ளாகி விட்டது. தற்போது சியாட்டில் விமான நிலையத்தில் விமான சேவைகள் வழக்கம் போல நடைபெறுகின்றன” என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் பற்றி பியர்ஸ் கவுண்டி ஷெரீப் பால் பாஸ்டர் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த சம்பவம் பயங்கரவாத சம்பவம் அல்ல. விமானத்தை ஓட்டிச் சென்றவர் 29 வயதான உள்ளூர் நபர் ஆவார். அவர் முட்டாள்தனமாக அந்த விமானத்தை ஓட்டிச்சென்று பயங்கரமான முடிவை சந்தித்து உள்ளார். அந்த விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன், விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் முயற்சி எடுத்தனர்” என கூறினார்.

    விபத்துக்குள்ளான விமானத்தை அந்த நபர் ஓட்டிச் சென்றதையும், அதை போர் விமானங்கள் துரத்திச் சென்றதையும் பலரும் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அது வைரலானது.

    இந்த சம்பவம் நடந்ததின் பின்னணி என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே விமானத்தை திருடி ஓட்டிச் சென்ற நபர், “என்னை கவனித்து பார்த்துக் கொள்ள பலர் இருக்கிறார்கள். ஆனால் நான் செய்த இந்த காரியம், அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்” என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விமானத்தை ஓட்டிச் சென்ற நபர் விமான ஊழியர் என்றும், விமானி என்றும் மெக்கானிக் என்றும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.  #Stolenplanecrashes #SeattleAirport 
    Next Story
    ×