search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு
    X

    அபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு

    ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 மாதங்களுக்கு முன் காணாமல் போன இந்தியரின் பிரேதம் அபுதாபி கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. #IndianmissinginUAE #Indianmissingfounddead
    துபாய்:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் எம்.வி.மொய்தீன். கடந்த 5 ஆண்டுகளாக ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவரது பணி விசா கடந்த மார்ச் மாதம் காலாவதியான பின்னரும் தாய்நாட்டுக்கு திரும்பாமல் அபுதாபியில் உள்ள சில இடங்களில் சிறிய வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வந்தார்.

    இந்நிலையில், ரம்ஜான் பண்டிகைக்கு பின்னர் மொய்தீனை பற்றி எவ்வித தகவலும் கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அவரது உறவினர், நண்பர்களுக்கும் கிடைக்காததால் காணாமல்போன அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    கடைசியாக அவர் அபுதாபியின் தென்மேற்கு பகுதியில் உள்ள முசாபா என்னுமிடத்தில் ஒரு மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்ததால் அப்பகுதி போலீசில் புகார் அளிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்தது.

    இந்நிலையில், அங்குள்ள தொண்டு நிறுவனத்தின் மூலம் மொய்தீனின் உறவினர் ஒருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைப்பு வந்தது. அரசு பிணவறையில் உள்ள ஒரு பிரேதத்தை அடையாளம் காட்டுமாறு வந்த அழைப்பையேற்று அவர் அங்கு சென்றார்.

    அப்போது, கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி கடற்கரை பகுதியில் ஒதுங்கியிருந்த ஒரு பிரேதத்தை பிணவறையில் பார்த்த அவர், அது மொய்தீனின் பிணம்தான் என்று அடையாளம் காட்டினார்.

    இதைதொடர்ந்து, அந்த பிரேதத்தை கேரளாவுக்கு கொண்டு வருவதில் அங்குள்ள தொண்டு நிறுவனத்தார் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், மரணம் அடைந்த மொய்தீனின் பாஸ்போர்ட் எங்கு, யாரிடம் உள்ளது என்ற விபரம் தெரியாததால் சற்று தாமதம் ஏற்படும் என தெரிகிறது.

    இதேபோல், கடந்த மாதம் முசாபா நகரில் காணாமல் போன கேரள மாநிலத்தவரான கே.பி. ஜப்பார் என்பவர் ஒரு வாரத்துக்கு பின்னர் பிணமாக கண்டெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். #IndianmissinginUAE  #Indianmissingfounddead
    Next Story
    ×