search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவத்தின் ஊதுகுழலாக இம்ரான்கான் செயல்படுவார் - முன்னாள் 2-வது மனைவி சொல்கிறார்
    X

    ராணுவத்தின் ஊதுகுழலாக இம்ரான்கான் செயல்படுவார் - முன்னாள் 2-வது மனைவி சொல்கிறார்

    பாகின்தானில் அடுத்து ஆட்சியமைக்க உள்ள இம்ரான் கானுக்கு சொந்த அறிவுத்திறன் கிடையாது. ராணுவத்தின் ஊதுகுழலாக செயல்படுவார் என்று முன்னாள் 2-வது மனைவி பேட்டியளித்துள்ளார். #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. இதனால் உதிரி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க இம்ரான்கான் முயற்சி செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரது முன்னாள் மனைவி இம்ரான்கானை கடுமையாக விமர்சித்து உள்ளார். இம்ரான்கான் முதலில் ஜெமீமா என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்த பிறகு இங்கிலாந்தை சேர்ந்த ரெகம்கான் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    இவர், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர். 10 மாதங்கள் மட்டுமே இவர்கள் வாழ்ந்த நிலையில் அவரையும் இம்ரான்கான் விவாகரத்து செய்துவிட்டார்.

    இப்போது 3-வதாக தனது மத ஆலோசகரை இம்ரான்கான் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தான் தேர்தலையொட்டி 2-வது மனைவி ரெகம்கான் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அதில், இம்ரான்கான் செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்களை கூறி இருந்தார்.

    இப்போது இம்ரான்கான் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆகப்போகும் நிலையில் ரெகம்கான் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இம்ரான்கான் பற்றி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-


    தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெறுவார் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால், அங்கு நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் இம்ரான்கானால் வெற்றி பெற்றிருக்க முடியாது.

    அவரது கட்சி இந்த அளவு வெற்றி பெற்றிருப்பதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை. குறிப்பாக அவரது கட்சி ஆட்சியில் இருந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில் கூட அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லாமல்தான் இருந்தது. அவரது அரசுக்கு அங்கு செல்வாக்கே இல்லை.

    இதேபோல் லாகூர், கராச்சி ஆகிய பகுதிகளில் மிக அனுபவம் வாய்ந்த வேட்பாளர்கள் எல்லாம் இம்ரான்கான் கட்சியின் அறிமுகம் இல்லாத வேட்பாளரிடம் தோற்று இருக்கிறார்கள். இது, நம்பும் படியாக இல்லை.

    இம்ரான்கான் ராணுவத்தின் வேட்பாளர். அவர் பிரதமராக வேண்டும் என்பது ராணுவத்தின் விருப்பம்.

    2013-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப்கூட ராணுவத்தின் ஆதரவால் தான் பிரதமர் ஆனதாக கூறப்பட்டது. இப்போது அதேபோல் இம்ரான்கானை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    ராணுவம் ஏதோ ஒரு திட்டத்துடன் இம்ரான் கானுக்கு ஆதரவு அளித்துள்ளது. நவாஸ் ஷெரீப் இந்தியா தொடர்பாக எடுத்த கொள்கைகள் ராணுவத்துக்கு பிடிக்கவில்லை.

    அதேபோல் சீனா, பாகிஸ்தான் உறவு விவகாரத்திலும் நவாஸ் ஷெரீப் செயல்பாடு ராணுவத்துக்கு எதிராக இருந்தது.

    எனவேதான் இப்போது இம்ரான்கானை ராணுவம் முன்னிறுத்தி உள்ளது. இம்ரான்கான் ராணுவத்தின் ஆட்டுவிக்கும் பொம்மையாக செயல்படுவார்.

    முக்கியமான பிரச்சினைகளில் இம்ரான்கானுக்கு போதிய அறிவுத்திறன் கிடையாது. ராணுவம் என்ன சொல்கிறதோ அதைத்தான் இவர் செய்யப்போகிறார்.


    ராணுவம்தான் இம்ரான் கானை உருவாக்கி இருக்கிறது என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். நான் அவரோடு மனைவியாக வாழ்ந்தவள். என்னிடம் பல வி‌ஷயங்களை இம்ரான்கான் கூறி இருக்கிறார். அவருக்கும், ராணுவத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி பல தகவல்களை என்னிடம் சொல்லி உள்ளார்.

    2008 தேர்தலில் ராணுவத்தினர் இம்ரான்கானுக்கு ஆதரவு காட்டவில்லை. இதன் காரணமாகத்தான் அந்த தேர்தலையே அவர் புறக்கணித்தார்.

    ஆனால், சமீப ஆண்டுகளில் ராணுவம் அவருக்கு ஆதரவாக இருந்தது. இதனால் ராணுவத்தைப்பற்றி அவர் பெருமையாக பேசிக் கொண்டு இருந்தார். ராணுவம் ஆதரவு இருப்பதால் தன்னால் நிச்சயம் பிரதமர் ஆக முடியும் என்று கருதினார்.

    இம்ரான்கானை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பது கடந்த 2, 3 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ஒன்று.

    இம்ரான்கானுக்கு இந்தியாவில் ஏராளமான நண்பர்கள் உண்டு. இந்தியாவை எதிரி போல் காட்டி அவர் பாசாங்கு செய்கிறார். ஆனால், உண்மையில் இந்தியாவோடு நல்லுறவுடன் இருப்பதையே அவர் விரும்புகிறார்.

    நான் அவரைப்பற்றி புத்தகம் வெளியிட்டது எனத சொந்த முடிவு. நவாஸ் ஷெரீப் கட்சி தூண்டுதல் தான் இதற்கு காரணம் என்று சொல்வது தவறானது.

    இவ்வாறு ரெகம்கான் கூறினார்.  #PakistanElections2018 #ImranKhan #RehamKhan
    Next Story
    ×