search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் நாளை தேர்தல் - பாதுகாப்பு பணியில் 3.7 லட்சம் வீரர்கள்
    X

    பாகிஸ்தானில் நாளை தேர்தல் - பாதுகாப்பு பணியில் 3.7 லட்சம் வீரர்கள்

    பாகிஸ்தானில் நாளை நடைபெறும் பாராளுமன்றம் மற்றும் மாகாண தேர்தல்களுக்காக 85 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 3 லட்சத்து 71 ஆயிரத்து 388 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #PakistanGeneralPolls
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நாளை பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களுக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி, தெஹ்ரீக் இ இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 முதன்மை கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இதில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றுள் 272 தொகுதிகளில் பொது வேட்பாளர்களுக்கான வாக்கெடுப்பும், மீதமுள்ள தொகுதிகளில் 10 தொகுதிகள் சிறுபான்மையினருக்கும், 60 தொகுதிகள் பெண்களுக்கு எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



    பாகிஸ்தானில் இந்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடியே 59 லட்சத்து 55 ஆயிரத்து 407 பேர். இதில் 5 கோடியே 92 லட்சத்து 24 ஆயிரத்து 262 ஆண் வாக்காளர்களும்,  4 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 145 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

    பொதுத்தேர்தல் நடைபெறும் 272 தொகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மிகவும் கடுமையான போட்டி நிலவும் இந்த தேர்தலுக்காக அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது.

    வேட்பாளர்கள் மரணம், வேட்பாளர் கைது ஆகிய காரணங்களால் பாராளுமன்றத்தின் இரு தொகுதிகளுக்கும், மாகாண சட்டசபைகளுக்கான 4 தொகுதிகளுக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலை நியாயமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்கும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு துவங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவுக்காக சுமார் 85 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல்கள் மற்றும் வாக்குச்சீட்டு, மை உள்ளிட்ட பொருட்கள் ராணுவ பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



    பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையிலும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 388 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதுதவிர துணை ராணுவ படையினர், உள்ளூர் போலீசார் உட்பட சுமார் 8 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு பெரிய பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanGeneralPolls
    Next Story
    ×