search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டன் பாராளுமன்றம் அருகே டிரம்ப் பேபி பலூன் - அமெரிக்க அதிபர் வருகைக்கு எதிர்ப்பு
    X

    பிரிட்டன் பாராளுமன்றம் அருகே டிரம்ப் பேபி பலூன் - அமெரிக்க அதிபர் வருகைக்கு எதிர்ப்பு

    பிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாராளுமன்றம் அருகே ‘டிரம்ப் பேபி’ பலூன் பறக்க விடப்பட்டது. #TrumpBabyballoon #LondonantiTrumpprotests
    லண்டன்:

    லண்டனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின்போது பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை முன்னர் கடுமையாக விமர்சித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பிரிட்டன் வருகைக்கு சில மாதங்களாகவே எதிர்ப்பு கிளம்பியது.

    வெளிநாட்டினருக்கு விசா அளிப்பதில் கட்டுப்பாடு, வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி மீது கூடுதல் விதிப்பு உள்ளிட்ட டிரம்ப் அரசின் கொள்கைகளால் பிரிட்டனில் வாழும் ஒருபிரிவினரிடம் அவருக்கு எதிரான மனப்போக்கு நிலவி வருகிறது.

    சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு பிரசார இயக்கம் நடைபெற்று வருகின்றது. நேற்று பிரதமர் தெரசா மே அளித்த விருந்தில் பங்கேற்க டிரம்ப் வந்தபோது அங்கு  கூடியிருந்த ஆயிரக்கணக்கான டிரம்ப் எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிரான கண்டன பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதேபோல், டிரபல்கர் சதுக்கத்தில் திரண்டுள்ள பலர் டிரம்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    லண்டன் நகரில் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என்பதால் வழக்கமாக பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சி லண்டன் புறநகர் பகுதியில் உள்ள தெரசா மே இல்லத்தில் நடைபெற்றது. இன்று விண்ட்ஸர் கேஸ்ட்டில் அரண்மனையில் எலிசபத்  ராணியை டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசுகிறார். ராணி அளிக்கும் விருந்திலும் கலந்துகொள்கிறார்.

    இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த டிரம்ப் எதிர்ப்பாளர்கள் இன்று லண்டன் நகரில் குவிந்துள்ளனர். இதற்கிடையில், டிரம்ப்பை நைய்யாண்டி செய்யும் விதத்தில் பாராளுமன்ற சதுக்கத்தில் ‘டிரம்ப் பேபி’ பலூன் ஒன்றை போராட்டக்காரர்கள் பறக்க விட்டனர்.

    ‘டிரம்ப் பேபி சிட்டர்ஸ்’ என்னும் போராட்ட இயக்கத்தை சேர்ந்தவரும், இந்திய வம்சாளியை சேர்ந்தவருமான ஷீலா மேனன் கூறுகையில், ‘இந்த நடவடிக்கை பிரிட்டன் நாட்டு அரசியல் நையாண்டியின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளது’ என குறிப்பிட்டார்.

    உள்ளூர் நேரப்படி, இன்று காலை 9.30 மணியளவில் சுமார் 6 மீட்டர் உயரமுள்ள இந்த ஆரஞ்சு நிற பலூனை விண்ணில் பறக்கவிட்டபோது அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

    பிரிட்டன் நாட்டு பாராளுமன்றன் அருகே இந்த பலூன் பறக்க அனுமதி அளித்தது தொடர்பாக கருத்து கூறிய லண்டன் நகர மேயர் சாதிக் கான், ‘டிரம்ப்புக்கு எதிரான இந்த போராட்டம் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் அல்ல, சிறப்பான உறவுமுறைகளை பேணிவரும் நாடு என்ற முறையில் எங்கள் நாடு மதிக்கப்பட வேண்டும். அந்த நன்மதிப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது இதுபோன்ற போராட்டங்களை தடுக்கவோ, தவிர்க்கவோ இயலாது’ என குறிப்பிட்டார். #TrumpBabyballoon  #LondonantiTrumpprotests
    Next Story
    ×