search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா - டிரம்ப் குற்றச்சாட்டு
    X

    வடகொரியா அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் குறுக்கே நிற்கும் சீனா - டிரம்ப் குற்றச்சாட்டு

    வடகொரியா உடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் தங்களால் வர்த்தக தடைக்கு உள்ளான சீனா குறுக்கே நிற்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். #Trump #NorthKorea #China
    வாஷிங்டன்:

    சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது. வடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையில், டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தெரியவந்தது. வடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த இணையச் செய்தி நிறுவனம் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.

    சமீபத்தில், பியாங்யாங் நகரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்-னின் வலதுகரமாக விளங்கிவரும் உதவியாளர் கிம் யோங் சோல் மற்றும் அந்நாடின் உயரதிகாரிகளுடன் தொடர்ந்து இரு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்ப்பியோ, அங்கிருந்து இன்று ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    அவர் புறப்பட்டு சென்ற பின்னர் வடகொரியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இன்று மாலை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ’இருநாட்களாக நடைபெற்ற இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவின் சார்பில் முன்வைக்கப்பட்ட நிர்பந்தங்களும், நிபந்தனைகளும், கடைபிடித்த பாணியும் மிகவும் வருத்தம் அளிக்கும் மனப்போக்குடன் அமைந்திருந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'கொரியா தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பகுதியாக மாற்ற வேண்டுமானால் அதற்கான திட்டமிட்ட அணுகுமுறைகளை இருதரப்பினரும் ஒரே நேரத்தில் கையாள்வதுதான் வேகமான வழியாக அமையும்’ என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டிருந்தார்.



    இருப்பினும், அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை வடகொரியா மதித்து நடந்து கொள்ளும் அதிலுள்ள ஷரத்துகளை நிறைவேற்றும் என இன்னும் நம்புவதாக டொனால்ட் டிரம்ப் இன்று கூறியுள்ளார். 

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாங்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை மதித்து கவுரவிப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. மேலும், குறிப்பாக எங்கள் கைக்குலுக்கலை அவர் மறக்க மாட்டார். அதே வேளையில், இந்த ஒப்பந்தத்தின் மீது அமெரிக்காவால் வர்த்தக தடை விதிக்கப்பட்டுள்ள சீனா ஆதிக்கம் செலுத்தும் என கருதுகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×