search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிமியாவை ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் - அமெரிக்கா திட்டவட்டம்
    X

    கிரிமியாவை ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் - அமெரிக்கா திட்டவட்டம்

    கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை.

    ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.

    இந்த நிலையில் இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை வெள்ளை மாளிகையும், கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதில் 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய நாடான பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என தற்போது முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பு அடுத்த மாதம் (ஜூலை) 16-ந்தேதி நடப்பதாக இருதரப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

    முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கும் அவர்கள், கூட்டு பிரகடனம் ஒன்றையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் என அமெரிக்கா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ‘கிரிமியாவை தங்கள் நாட்டுடன் ரஷியா இணைத்து கொண்டதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவுமில்லை. எனவே, கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும்வரை ரஷியா மீதான பொருளாதார தடைகளை விலக்கிகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

    1991-ல் சோவியத் யூனியன் என்ற அமைப்பு உடைந்து பல சிறிய நாடுகளாக பிளவுபட்ட பின்னர் கடந்த 2014-ல் உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

    உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே தங்கள் நாட்டுடன் இணைந்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது.

    கிரிமியாவை ரஷியா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்து கொள்வது தொடர்பாக அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்திருந்த உத்தரவு செல்லாது என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. கிரிமியாவை இணைத்தது தொடர்பான ரஷ்யாவின் ஆணையை தள்ளுபடி செய்வதாக உக்ரைன் நாட்டின் ஐ.நா தூதர் வோலோடைமர் எல்சென்கோ தெரிவித்துள்ளார்.

    உக்ரைனில் இருந்து கிரிமியா என்ற தனிநாட்டை பிரித்து உருவாக்க நடைபெற்ற போரில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியான நிலையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பூசல்கள் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்தே குரல் எழுப்பி வந்துள்ளது நினைவிருக்கலாம். #Crimea annexation #WhiteHouse
    Next Story
    ×