search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா, ரஷியா அல்லாத மூன்றாவது நாட்டில் டிரம்ப் - புதின் சமாதான பேச்சுவார்த்தை
    X

    அமெரிக்கா, ரஷியா அல்லாத மூன்றாவது நாட்டில் டிரம்ப் - புதின் சமாதான பேச்சுவார்த்தை

    அமெரிக்கா, ரஷியா இடையிலான சமாதான பேச்சுவார்த்தையை மூன்றாவது நாட்டில் நடத்த இருநாடுகளும் இன்று சம்மதம் தெரிவித்துள்ளன. #USRussiasummit
    மாஸ்கோ:

    சிரியா விவகாரத்தால் அமெரிக்கா - ரஷியா இடையே சமீபத்தில் ஏற்பட்ட பூசல், பிரிட்டன் நாட்டில் ரஷிய முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகளை ரசாயன தாக்குதலால் ரஷியா கொல்ல முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டினால் பூதாகரமாக வெடித்தது.

    இதுதவிர, அமெரிக்கா - ரஷியா இடையிலான மேலும் சில வேறுபாடுகளை களைவதற்காக இருநாட்டு தலைவர்களும் நேருக்குநேர் சந்தித்துப் பேச வேண்டும் என சர்வதேச அரசியில் நோக்கர்கள் கருதுகின்றனர். ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு ஒற்றுமையை ஏற்படுத்துவதில் ஆஸ்திரியா நாட்டு பிரதமர் செபாஸ்டின் குரூஸ் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பும், முக்கிய பேச்சுவார்த்தையும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் என ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிர்ட்டி பெஸ்கோவ் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு அச்சாரமாக அமெரிக்க தேசிய ஆலோசகர் ஜான் பால்டோன் இன்று ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது அவரை வரவேற்று கருத்து தெரிவித்துள்ள புதின், உங்களது மாஸ்கோ பயணம் நமது இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவு முழுமையடைவதற்கான முதல் படிக்கட்டாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். 

    இதைதொடரந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான சமாதான பேச்சுவார்த்தையை அமெரிக்கா, ரஷியா அல்லாத மூன்றாவது நாட்டில் நடத்த இருநாடுகளும் இன்று சம்மதம் தெரிவித்துள்ளதாக ரஷிய அதிபர் புதினின் உதவியாளர் யூரி உஷாக்காவ் குறிப்பிட்டார்.

    பேச்சுவார்த்தைக்கான தேதியும் நேரமும் தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் இதுதொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #USRussiasummit 
    Next Story
    ×