search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு
    X

    ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வாக்காளர் பதிவு மையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. #KabulAttack

    காபுல்:

    தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படைகள் வாபஸ் பெறப்பட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

    இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் எழுந்தன. நடப்பு பாராளுமன்றத்தின் காலம் முடிவடைவதற்குள் நியாயமான வகையில் அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உள்ளூர் மக்களும் சர்வதேச அரசியல் நோக்கர்களும் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால், புதிய வாக்களர்கள் கணக்கெடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை காரணம் காட்டி அடுத்தடுத்து தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டில் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. இதனால், அதிபர் தேர்தலுக்கு முன் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படுமா? என்ற சந்தேகம் அந்நாட்டு மக்களிடையே நிலவி வந்தது.

    இந்நிலையில், கடந்த 1-4-2018 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆப்கானிஸ்தான் தலைமை தேர்தல் கமிஷனர் குலா ஜான் அப்துல் பாடி சயத், அக்டோபர் 20-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதையடுத்து, புதிய வாக்களர் சேர்க்கை மற்றும் அடையாள அட்டை வழங்கும் பணிகளில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், காபுல் நகரின் தாஷ்-இ பார்சி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த வாக்காளர் பதிவு மையத்தில் நேற்று பிற்பகல் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி தனது உடலில் கட்டி வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாகவும், 56 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

    இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் இணையதளம் குறிப்பிட்டுள்ள நிலையில் நேற்று மாலை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது. பலியானவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. இதில் 22 பெண்களும், 8 குழந்தைகளும் அடங்குவர். மேலும் இந்த தாக்குதலில் 119 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல, பக்லான் என்ற பகுதியில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில் நேற்று குண்டு வெடித்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர். #Afghanistan #KabulBlast #KabulAttack
    Next Story
    ×