search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புகிறார் - வழக்கில் ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க கோர்ட்டு மறுப்பு
    X

    நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புகிறார் - வழக்கில் ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க கோர்ட்டு மறுப்பு

    ஊழல் வழக்கில் தொடர்புடைய நவாஸ் ஷெரீப் வழக்கில் ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க கோர்ட்டு மறுப்பு தெரிவித்ததை அடுத்து நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் புற்றுநோய் தாக்கி அவதிப்பட்டு வருகிறார். லண்டனில் அவர் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப்பும், அவரது மகள் மரியம் நவாசும் கடந்த சில தினங்களுக்கு முன் லண்டன் சென்றனர்.

    ஊழல் வழக்குகளில் விசாரணை உச்சக்கட்டம் அடையும் நிலையில் அவர்கள் லண்டன் சென்றதால், தண்டனையில் இருந்து தப்பும் வகையில் நாடு திரும்ப மாட்டார்கள் என்ற யூகங்கள் எழுந்தன.

    இதற்கு இடையே நவாஸ் ஷெரீப்பும், மகள் மரியம் நவாசும் 27-ந் தேதி வரை நேரில் ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க வேண்டும் என்று இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஒரு நாள் மட்டுமே நீதிமன்றம் விலக்கு அளித்தது. 27-ந் தேதி வரை ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க முடியாது என நீதிபதி முகமது பஷீர் கூறி விட்டார்.

    இருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தால் அடுத்த விசாரணையின்போது அவர்கள் ஆஜர் ஆக முடியாமல் போனால் புதிய மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதி கூறினார்.

    இந்தநிலையில் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் திரும்ப முடிவு செய்து உள்ளதாக அவரது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    இதுபற்றி அந்த கட்சியின் தேசிய செயலாளர் முசாகிதுல்லா கான் கூறும்போது, “சரியாக எந்த தேதியில் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவார் என்பது எனக்கு தெரியாது. அடுத்த விசாரணை தேதிக்குள் அவர் நாடு திரும்புவது உறுதி. அவர் கோர்ட்டு உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பார்” என்று குறிப்பிட்டார். 
    Next Story
    ×