search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிபராக பதவி வகிக்க தகுதி இல்லாதவர் டிரம்ப் - பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குனர் பேட்டி
    X

    அதிபராக பதவி வகிக்க தகுதி இல்லாதவர் டிரம்ப் - பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குனர் பேட்டி

    அமெரிக்க அதிபராக பதவி வகிக்க டொனால்ட் டிரம்ப் தகுதி இல்லாதவர் என அவரால் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை (எப்.பி.ஐ.) இயக்குனராக பணியாற்றியவர் ஜேம்ஸ் காமே. அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் அலுவலக ரகசியம் தொடர்பான முக்கிய கடிதங்களை அதிகாரப்பூர்வ அலுவலக மின்னஞ்சல் மூலம் கையாளாமல் தனது தனிப்பட்ட இமெயில் முகவரி வாயிலாக பரிமாறி வந்ததாக முன்னர் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனால், 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி மிக குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ நேர்ந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை விசாரிக்க தவறி விட்டதாக தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் கூறிவந்த நிலையில் தேர்தலுக்கு 11 நாள் முன்னதாக இதுதொடர்பான விசாரணைக்கு ஜேம்ஸ் காமே உத்தரவிட்டார்.

    பின்னர், தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் ஜேம்ஸ் காமே-வை எப்.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையில், அதிபர் டிரம்ப்புக்கு சமீபத்தில் முழு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனைகளின் முடிவில் அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், உளவியல் ரீதியாக தெளிவான மனநிலையில் இருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.



    ஹிலாரி கிளிண்டனின் இமெயில் பரிமாற்றம் தொடர்பான விசாரணை மிக மோசமான முறையில் நடைபெற்றதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியிருந்த டிரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் காமே-வை வசைமாரி பொழிந்திருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவி வகிக்க டொனால்ட் டிரம்ப் தகுதி இல்லாதவர் என அவரால் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் காமே குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, அமெரிக்காவின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜேம்ஸ் காமே, ‘டிரம்ப் மருத்துவ ரீதியாக இந்நாட்டின் அதிபராக பதவி வகிக்கும் தகுதி உடையவர்தானா? அல்லது, அவர் ஞாபகமறதி நோயின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறாரா? என்னும் சர்ச்சைக்குள் போக நான் விரும்பவில்லை.

    அவர் அமெரிக்காவின் அதிபராக பதவி வகிக்க மருத்துவ ரீதியாக தகுதியற்றவர் என நான் கருதவில்லை. ஆனால், தார்மீக ரீதியாக நமது நாட்டின் அதிபராக பதவி வகிக்க அவருக்கு தகுதி இல்லை.

    நமது நாட்டின் மரியாதை மற்றும் அடிப்படை சித்தாந்தங்களுக்கு அதிபர் மதிப்பளிக்க வேண்டும். மிக முக்கியமாக உண்மையானவராக இருக்க வேண்டும். டிரம்ப்பால் இதை எல்லாம் கடைபிடிக்க இயலாது’ என குறிப்பிட்டுள்ளார்.#tamilnews
    Next Story
    ×