search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் இந்துக்களின் உணர்வினை புண்படுத்தியோர் மீது நடவடிக்கை - நாடாளுமன்றம் உத்தரவு
    X

    பாகிஸ்தானில் இந்துக்களின் உணர்வினை புண்படுத்தியோர் மீது நடவடிக்கை - நாடாளுமன்றம் உத்தரவு

    இந்துக்களின் உணர்வினை புண்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இந்து கடவுளாக இம்ரான்கானை சித்தரித்து வெளியான படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்துக்களின் உணர்வினை புண்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானை இந்துக் கடவுளான சிவபெருமானாக சித்தரிக்கும் படம் ஒன்று வெளியானது.

    இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக உலா வந்ததால், அது இந்து மக்களின் உணர்வினை புண்படுத்துவதாக அமைந்தது. சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை நேற்று முன்தினம் உலுக்கியது.

    இது தொடர்பான பிரச்சினையை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இந்து எம்.பி.யான ரமேஷ் லால் எழுப்பி பேசினார். “இம்ரான்கானை இந்து கடவுளாக சித்தரித்து வெளியான படம், இந்து மக்களின் உணர்வினை புண்படுத்துகிறது; இத்தகைய குற்றங்கள் இணையதள பாதுகாப்பு சட்டத்தின் வரம்புக்குள் வருகிறது. எனவே சம்மந்தப்பட்டவர்களை தண்டிக்காமல் விட்டு விடக்கூாது” என கூறினார்.

    சர்ச்சைக்கு உரிய படத்தை வெளியிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என்று அவர் சபாநாயகர் சர்தார் அயஸ் சாதிக்குக்கு கோரிக்கை விடுத்தார்.

    இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த இந்து எம்.பி.யான லால் சந்த் மாலி பேசுகையில், “சிறுபான்மை சமூகத்தினரை குறிவைத்துத்தான் இத்தகைய விஷமப்பிரசாரம், இணையதளத்தில் நடத்தப்படுகிறது என்பதற்கு ஆதாரம் உள்ளது. இப்படிப்பட்ட படங்களை வெளியிடுவது பாகிஸ்தானில் உள்ள லட்சோப லட்சம் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது” என்று கூறினார்.

    இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் துணைத்தலைவர் ஷா முகமது குரேஷி கூறும்போது, தனது கட்சி எப்போதுமே இந்துக்களை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தார்.

    இத்தகைய படங்களை ஒரு கட்சியின் சமூக வலைத்தள பிரிவுதான் உருவாக்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.

    உள்துறை ராஜாங்க மந்திரி தல்லால் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், “இத்தகைய செயல்களுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இணையதளங்களில் இந்துக்களின் உணர்வுகளை மட்டுமின்றி இஸ்லாமியர்களின் உணர்வுகளையும் புண்படுத்துவதாக கூறினார்.

    இந்த விவகாரத்தில் சபாநாயகர் சர்தார் அயஸ் சாதிக் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் ஒரு வார காலத்தில் விசாரணை நடத்தி முடிக்குமாறு, அந்த துறையின் ராஜாங்க மந்திரி தல்லால் சவுத்ரிக்கு சபாநாயகர் சர்தார் அயஸ் சாதிக் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவத்தில், குற்றவாளிகள்மீது வழக்கு பதிவு செய்யுமாறு மத்திய புலனாய்வு முகமை எப்.ஐ.ஏ.வுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார். 
    Next Story
    ×