search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல்
    X

    இலங்கை பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல்

    இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. #ranilwickremesinghe #srilankaparliament
    கொழும்பு:

    இலங்கையில் உள்ளாட்சி பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனா கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 341 இடங்களில் 240-க்கும் அதிகமான இடங்களில் ராஜபக்சே கட்சிக்கூட்டணி வென்றது.

    இதையடுத்து, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரா கட்சி ஆதரவுடன் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர்கள் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

    கடந்த மூன்றாண்டுகளாக அரசு நிதியை கையாள்வதில் ரணில் விக்ரமசிங்கே போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் பொறுப்பில் சிங்கப்பூர் குடிமகனான அர்ஜுனா மகேந்திரன் என்பதை நியமித்த விவகாரம், 2015-16-ம் ஆண்டுகளில் மத்திய வங்கியின் பாண்டுப் பத்திரம் வெளியிட்டதில் நடைபெற்ற ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில், கண்டி மாவட்டத்தில் கடந்த வாரம் வெடித்த வன்முறை சம்பவங்கள் நாட்டின் பிறபகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் அவசரநிலை சட்டம் பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு துறையை தனது கையில் வைத்திருந்த ரணில் விக்ரமசிங்கே தனது கடமையை சரிவர செய்ய தவறிவிட்டதாக கண்டனக் குரல்கள் கிளம்பியுள்ளன.

    இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவுடன்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. 

    ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரா கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் கட்சியை சேர்ந்த 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் என எதிர்க்கட்சிகளை சேர்ந்த 51 எம்.பி.க்கள் இந்த தீர்மானத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிகிறது.

    கண்டியில் எழுந்த கலவரத்தின்போது சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற தவறிய ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும். இலங்கை மத்திய வங்கியின் தலைவர் பதவியில் உள்நாட்டை சேர்ந்தவரை மட்டுமே கவர்னராக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் பாராளுமன்ற சபாநாயகர் காரு ஜெயசூர்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    எனினும், பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பின் மூலம் பிரதமரை ஆட்சியை விட்டு இறக்கும் அளவுக்கு எதிர்க்கட்சி கூட்டணியிடம் போதிய உறுப்பினர்கள் பலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும், ஆளும் ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்ரமசிங்கே மீது காழ்ப்புணர்வு கொண்ட எம்.பி.க்களின் மறைமுக ஆதரவுடன் தங்களது திட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக தெரிகிறது.  #tamilnews #ranilwickremesinghe  #srilankaparliament 
    Next Story
    ×