search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சி தலைவர் பதவியில் நீடிக்க நவாஸ் ஷெரீப்புக்கு தடை விதித்தது பாக். உச்ச நீதிமன்றம்
    X

    கட்சி தலைவர் பதவியில் நீடிக்க நவாஸ் ஷெரீப்புக்கு தடை விதித்தது பாக். உச்ச நீதிமன்றம்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது கட்சியின் தலைவர் பதவியில் நீடிக்க தகுதியில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது உறவினர்கள் வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பாக பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்தது. இதையடுத்து பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். லண்டனில் சொத்துகள் வாங்கி குவித்தது தொடர்பாக நவாஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    பாகிஸ்தான் சட்ட விதிகளின்படி, தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் கட்சித்தலைவர் பொறுப்பு வகிக்க முடியாது என்பதால், அவர் கட்சி தலைவர் பதவியில் நீடிக்க வகை செய்யும் சீர்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஆளுங்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவராக நவாஸ் நீடித்தார்.



    இதனை எதிர்த்து பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீப் தனது கட்சியின் தலைமைப்  பொறுப்பை ஏற்க தகுதியில்லை என்று தீர்ப்பு வழங்கியது.  இது ஆளுங்கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    ‘தேர்தல் சட்ட விதி 17-ன் படி, நவாஸ் ஷெரீப் தனது கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு மீண்டும் வந்தது செல்லாது. கட்சி தலைவர் மற்றும் அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகுதி மற்றும் தகுதி இழப்பு தொடர்பான சட்ட விதிகளை கட்சி தலைவர் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.  #tamilnews
    Next Story
    ×