search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி துப்பாக்கிச்சூட்டில் முன்கூட்டியே தகவல் கிடைத்தும் தடுத்து நிறுத்துவதில் எப்.பி.ஐ.க்கு தோல்வி
    X

    பள்ளி துப்பாக்கிச்சூட்டில் முன்கூட்டியே தகவல் கிடைத்தும் தடுத்து நிறுத்துவதில் எப்.பி.ஐ.க்கு தோல்வி

    முன்கூட்டியே தகவல் கிடைத்தும் அமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூட்டில் கொலையாளியை கண்டுபிடித்து தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது என மத்திய புலனாய்வு படையான ‘எப்.பி.ஐ.’ ஒப்புக்கொண்டது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் புளோரிடா மாகாணம், பார்க்லேண்ட் நகரில் உள்ள மெர்ஜாரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப்பள்ளியில் 14-ந் தேதி மதியம் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவம், அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சம்பவ பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக நினைவுச்சின்னத்தில் அந்தப் பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்களை வைத்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதலை நடத்திய முன்னாள் மாணவர் நிக்கோலஸ் குரூஸ் (வயது 19), சம்பவத்தன்று மதியம் 2.19 மணிக்கு வாடகைக் காரில் அந்தப் பள்ளிக்கூட பகுதிக்கு வந்து இறங்கி உள்ளார்.

    கையில் ஏஆர்-15 ரக துப்பாக்கியை எடுத்து வந்து உள்ளார். பள்ளிக்கூடத்தின் வராண்டாவிலும், மைதானத்திலும் காணப்பட்ட மாணவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தி இருக்கிறார். சரியாக மதியம் 2.28 மணிக்கு அவர் தாக்குதலை முடித்து விட்டு, பள்ளிக்கூட வளாகத்தை விட்டு வெளியேறி இருக்கிறார். அங்கு இருந்து வெளியேறிய அவர், வால்மார்ட் கடைக்கும், பின்னர் மெக்டொனால்ட்ஸ் உணவகத்துக்கும் சென்று உள்ளார். அதன்பின்னர் 40 நிமிடங்கள் கழித்து அவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

    அவர் காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 17 பேரை கொன்று குவித்ததை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.



    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நடத்துவதற்கு அவர் முன்கூட்டியே சதித்திட்டம் தீட்டி உள்ளார். தனது சதித்திட்டம் பற்றி அவர் யு டியூப் இணையதளத்தில் பதிவு செய்து உள்ளார். அதில் அவர், “நான் பள்ளிக்கூடத்தில் தொழில் முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்போகிறேன்” என கூறி உள்ளார்.

    இதைக் கண்ட யு டியூப் பயன்பாட்டாளர் ஒருவர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யிடம் புகார் செய்து உள்ளார். ஆனால் எப்.பி.ஐ. துப்பு துலக்கி அவரை கண்டுபிடித்து, பள்ளிக்கூட துப்பாக்கிச்சூடு சதித்திட்டத்தை முறியடிப்பதில் தோற்றுப்போய் விட்டது.

    இதை எப்.பி.ஐ. ஒப்புக்கொண்டு உள்ளது. இதுபற்றி எப்.பி.ஐ. கூறும்போது, “யு டியூப் பதிவை ஆராய்ந்தோம். ஆனால் இந்த பதிவை செய்தது யார் என கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது” என்று தெரிவித்தது.

    அது மட்டுமின்றி அந்தப் பள்ளிக்கூடத்தின் கணித ஆசிரியர் ஜிம் கார்டு, “குரூஸ் தவறான நடத்தை குறித்து பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் இ மெயில் மூலம் ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்தனர்” என தெரிவித்தார்.

    இதற்கிடையே இத்தகைய துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு காரணம், குற்றவாளிகளின் மன நல பாதிப்புதான் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். #tamilnews
    Next Story
    ×