search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இலங்கை சிறைகளில் இருந்து இன்று 109 மீனவர்கள் விடுதலை

    113 தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை சட்டத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்நாட்டின் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 109 மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். #indianfishermen #srilankaprisons
    கொழும்பு:

    தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்யது வருகின்றனர்.

    மேலும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், அவர்களின் வலைகளை நாசப்படுத்தியும் அட்டூழியத்தில் ஈடுபடுகின்றனர். கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறைகளில் பல மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளும் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளன.

    சமீபத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை பாராளுமன்றத்தில் சமீபத்தில் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறைபிடிக்கப்படும் படகுகளின் அளவுக்கேற்ப 2 முதல் 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம்வரை கைது செய்யப்பட்ட 113 தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக, யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு உத்தரவின் நகல் கடந்த 9-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

    அவர்களில் 4 மீனவர்கள் கடந்த 9-ம் தேதி அவசரமாக விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரின் மகன் இறந்து விட்டதால் கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள 109 மீனவர்கள் வழக்கமான நடைமுறைகள் முடிந்த பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

    இவர்களை தவிர யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் சிறைகளில் மேலும் 27 தமிழக மீனவர்கள் அடைபட்டு கிடக்கின்றனர். வரும் 23-ம் தேதி கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் விரைவில் இவர்களுக்கு விடுதலை செய்யப்படலாம் என தெரிகிறது. #tamilnews #indianfishermen #srilankaprisons
    Next Story
    ×